Published : 29 Aug 2019 05:17 PM
Last Updated : 29 Aug 2019 05:17 PM
காரைக்குடி
உலகப் புகழ்பெற்ற செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததற்கு, காரைக்குடி கைத்தறி நெசவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செட்டிநாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது செட்டிநாட்டு உணவு, பலகாரம், பரந்து விரிந்த கட்டிடங்கள் என அந்தப் பட்டியல் விரிந்து கொண்டே செல்லும். அதே வரிசையில் இளம்பெண்கள் விரும்பும் செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கும் இடம் உண்டு.
இந்தியாவிலேயே பாரம்பரிய, அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படுவது செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைதான். மேலும் சிறிதும் பெரிதுமாக பட்டையான கோடுகள் (அ) கட்டங்கள் நிறைந்த அவற்றின் டிசைனும் சிறப்புதான். இந்த சேலைகளை 200 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடி பகுதியில் தேவாங்கர் இனத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறியாக நெசவு செய்து வருகின்றனர்.
நகரத்தார்களுக்காக நெசவு செய்யப்பட்ட இந்த சேலைகள் தற்போது உலகமெங்கும் பிரபலமாக உள்ளன. செட்டிநாட்டுச் சேலைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம்தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுரம், மயில், அன்னம், போன்ற பராம்பரியமான டிசைன்களே அதிகம் இருக்கும். மேலும் இந்த சேலைகளில் டபுள் சைட் பார்டர் இருக்கும். அத்தோடு வேறு எந்த சேலையிலும் இல்லாத 48 இஞ்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம் இருக்கும். சமீபகாலமாக சிங்கிள் சைட் பார்டர் சேலைகளும் தயாரிக்கின்றனர்.
நெசவு முறை
செட்டிநாட்டு காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு 60-க்கு 60 அளவுள்ள பருத்தி நூலையே பயன்படுத்துகின்றனர். அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் இவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணச் சாயங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் டபுள் ஷேடு கிடைக்கிறது. புடவையும் பளிச்சென்று காண்போரைக் கவர்ந்திழுக்கிறது. ஆண்டாண்டிற்கும் சாயம் போகாது.
பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் 'ஷட்டில் நெசவு' முறையில் நெசவு செய்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் காரைக்குடி கைத்தறி நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புவிசார் குறியீடுக்காக முயற்சி செய்தவரும், அமரர் ராஜீவ் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான பழனியப்பன் இதுகுறித்து கூறும்போது, ''இருநூறு ஆண்டுகளாக தலைமுறை, தலைமுறையாக நெசவுத் தொழில் செய்து வருகிறோம். ஆரம்ப காலத்தில் பட்டு மூலம் சேலைகளைத் தயாரித்தோம். நகரத்தார் பெண்களின் கோரிக்கையை ஏற்று பருத்தி நூலில் நெசவு செய்ய ஆரம்பித்தோம்.
காலப்போக்கில் அனைத்து சமூகப் பெண்களும் கண்டாங்கி சேலையை விரும்பிக் கட்டுகின்றனர். தற்போது திருமணமாகாத பெண்கள் கூட கண்டாங்கி சேலைக்கு மாறி வருகின்றனர். இங்கு தயாராகும் சேலைகளை பெங்களூரு, புதுடெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகிறோம்.இவ்வகை சேலைகள் தமிழகத்திலும் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிரபலமான கடைகளிலும் கிடைக்கும்.
கைத்தறியில்தான் சேலைகளைத் தயாரிக்கிறோம். ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒரு சேலை மட்டுமே நெசவு செய்ய முடியும். மாதம் 600 முதல் 700 சேலைகளைத் தயாரிப்போம். ஒரு சேலையை ரூ.790 முதல் ரூ.880-க்கு விற்பனை செய்கிறோம். 2013-ல் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பித்தோம். ஆனால் 2016-லேயே ஹேண்ட்லூம் (கைத்தறி) பிராண்டை மத்திய அரசு வழங்கியது.
தற்போது புவிசார் குறியீடு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் அங்கீகாரம் கொடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பவர்லூம் (இயந்திரத் தறி) மூலம் தயாரிக்கப்படும் சேலைகளையும் செட்டிநாடு கண்டாங்கி சேலைகள் என விற்பனை செய்கின்றனர். எங்களது சேலைளில் ஹேண்ட்லூம் பிராண்ட் என இருக்கும். இதைப் பார்த்து மக்கள் வாங்க வேண்டும். புவிசார் குறியீடு கிடைத்ததால் மேலும் 100 தறிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT