Published : 13 Jul 2015 10:20 AM
Last Updated : 13 Jul 2015 10:20 AM

சட்டப்பேரவை தேர்தலையொட்டி சமூக வலைதளங்களின் மூலம் இளைஞர்களை அணுகுவோம்: பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி சமூக வலைதளங்களின் மூலம் இளைஞர்களை தொடர்புகொள்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் சென்னையில் நேற்று கூறினார்.

தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவுக்கான பயிற்சிக் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. அதில் பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக முரளிதர ராவ் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வருகிறது. அந்த தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை பாஜக தொடங்கிவிட்டது. பாஜகவினர் சட்டப்பேரவை தொகுதிவாரியாக சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தொடர்பு கொள்வார்கள். பாஜகவின் சாதனைகளையும், தமிழகத்தில் மாற்றத்துக்கான தேவையையும் சமூக வலைதளங்கள் மூலம் எடுத்துக் கூறுவோம். சட்டப்பேரவை தேர்தலில் சமூக ஊடகம் எங்களின் முக்கிய ஆயுதமாக இருக்கும்.

தமிழகத்தில் நிலவும் மோசமான சூழலால் தொழிற்சாலைகள் மூடப்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். அன்புமணியை பாமக முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது அவர்களின் முடிவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களால் எந்த நல்லதும் நடக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி என்று சிலர் ஒரு கருத்தை திணிக்கின்றனர். அதில் துளியும் உண்மையில்லை. காமராஜரைப் பற்றி பேச எங்களுக்கு உரிமை இல்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுவது ஏற்புடையது அல்ல. அதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x