Last Updated : 25 Jul, 2015 03:49 PM

 

Published : 25 Jul 2015 03:49 PM
Last Updated : 25 Jul 2015 03:49 PM

நெல்லையில் நெகிழ்கிறது பிளாஸ்டிக் தடை: சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வணிக நிறுவனங்கள், கடைகளில் 40 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் (நெகிழி) பைகளுக்கு விதிக்கப்பட்ட தடை அப்பட்டமாக மீறப்படுகிறது. இதை மாநகராட்சி நிர்வாகமோ, அதிகாரிகளோ கண்டுகொள்வதேயில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியராக ராஜேந்திர ரத்னூ இருந்தபோது பிளாஸ்டிக் மீதான தடை சிறப்பாக அமல்படுத்தப்பட்டிருந்தது. இது தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டன. இதையடுத்து மற்ற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் மீதான தடை அமலுக்கு வந்தது. ஆனால், அதை உரியவகையில் நடைமுறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வராததாலும், வணிகர் கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு கிடைக்காததாலும் அந்த முயற்சி தோல்வி கண்டிருக்கிறது. தற்போது 40 மைக்ரானுக்கும் குறைவான கேரிபேக்குகள், குவளைகள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. திருநெல் வேலியில் தாமிரவருணி ஆறு, பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், வேய்ந்தான்குளம், நயினார்குளம் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்திருக்கின்றன. இவரை கால்வாய் களில் நீரோட்டைத்தைத் தடுக்கின்றன.

பேசினால் போதாது

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு என்று அவ்வப்போது பேரணிகளும், கூட்டங்களும் நடத்தப்படுவதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக ஒவ்வொருவரும் கருதுகிறார்கள். கடந்த மார்ச் 31-ம் தேதி திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இ.புவனேஸ்வரி பட்ஜெட் உரையை வாசித்தபோது, “திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் 40 மைக்ரான் தடிமன் குறைவான பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டிருக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள் சோதனையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், சுத்தமான மாநகராட்சியை உருவாக்குவோம்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவரின் உரை வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது என்று கூறும் அளவுக்கு நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

செயல்பட வேண்டும்

வெறுமனே பேச்சளவில் பிளாஸ்டிக் தவிர்ப்பை செய்துவிட முடியாது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரி பேக், டீ கப், ஜவுளிக்கடை பைகள், உணவகங்களில் சாம்பார், மோர், ஜூஸ் கட்டிக்கொடுக்கப்படும் பைகள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை அமலாக்க மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நீராதாரங்களும், நிலத்தடி நீர் வளங்களும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கடும் அபராதம் தேவை

வான்முகில் அமைப்பின் இயக்குநர் ம.பிரிட்டோ கூறும்போது, “அனைத்து தரப்பு மக்களிடையேயும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த தகவல் சென்றடைய வேண்டும். கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், தன்னார்வ அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், மகளிர் குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து அரசு அலுவலகங்கள் என்று எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து பேசும் வகையில் செய்யப்பட வேண்டும் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகளிடம் இருந்து பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். உரிய அபராதக் கட்டணம் விதிக்க வேண்டும் என்றார் அவர்.

பிளாஸ்டிக் தவிர்ப்பு விஷயத்தில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு பொதுமக்களும், வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த முயற்சி வெற்றிபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x