Published : 28 Aug 2019 11:07 AM
Last Updated : 28 Aug 2019 11:07 AM
தூத்துக்குடி,
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் என திமுக எம்.பி. கனிமொழி சாடியுள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி இன்று (புதன் கிழமை) விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்க முடிகிறது. வேலையில்லா திண்டாட்டம் மக்களை பாதித்துள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது.
கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்தபோதும் அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்தது. அதனால் இந்தியப் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளாமல், தொலைநோக்கு பார்வையில்லாமல் ஆட்சி செய்து வருகிறது.
மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
இது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் உள்ள பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பணிகளைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.
தமிழகத்தில் பல முதலீட்டு மாநாடுகளை நடத்தி ஒன்றும் செய்ய முடியாத தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்ய போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT