Published : 27 Aug 2019 08:24 PM
Last Updated : 27 Aug 2019 08:24 PM

தீபாவளி பேருந்து முன்பதிவு தொடக்கம்; சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் 525 மின்சார பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

மின்சார பேருந்தில் பொதுமக்களோடு பயணம் செய்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் சென்னை உள்ளிட்ட 525 முக்கிய மாவட்டங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

நேற்று தொடங்கி வைக்கப்பட்ட புதிய மின்சாரப் பேருந்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (27.08.2019) மக்களோடு பயணம் செய்து, பேருந்தின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். பயணத்தின் போது, இப்பேருந்து பல்வேறு வசதிகளுடன் பயணம் செய்திட மிகவும் வசதியாக உள்ளது.

கட்டணமும் நார்மலாக உள்ளது என்று தெரிவித்ததோடு, சென்னையில் பல்வேறு இடங்களுக்கு இப்பேருந்தினை இயக்கிட வேண்டும் எனறு அமைச்சரிடம் தெரிவித்தனர். தற்போது, சோதனை அடிப்படையில் இப்பேருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், இப்பேருந்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும், கூடிய விரைவில் அதிக அளவில் இயக்கிட விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும், மாதிரி மின்சாரப் பேருந்தினை இன்று (27.08.2019) மாநகர் போக்குவரத்துக் கழக, மத்திய பணிமனையில் பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் இப்பேருந்தில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வின்போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இந்த மின்சாரப் பேருந்தானது, அசோக் லேலாண்டு நிறுவனத்தினால், இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு, முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, அனைத்து நவீன வசதிகளுடன், நாள்தோறும் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து, A.1 வழித்தடமான மயிலாப்பூர், அடையார் வழியாக திருவான்மியூர் வரை, காலை 2 நடையும், மாலை 2 நடையும் இயக்கப்படுகிறது.

இம்மின்சாரப் பேருந்தானது இருக்கைகள் வசதிக்கேற்ப அதன் அளவு மாறுபடும்.குறிப்பாக, சில நிறுவனத்தின் பேருந்தானது 9.5 மீட்டர் நீளமும், 32 இருக்கைகளும் கொண்டது. மற்றொரு நிறுவனத்தின் பேருந்தானது 12 மீட்டர் நீளமும், 40 இருக்கைகளையும் கொண்டது. இதுபோன்ற பேருந்துகளில், GPS வசதி, கண்காணிப்பு வசதி, பேருந்தின் இயக்கம், ஓட்டுநரின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளது.

மின்சாரப் பேருந்து படிப்படியாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயக்கிட ஆவன செய்யப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக C-40 என்கின்ற முகமையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் (KFW) நிதி உதவியுடன் 2,000 மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்துகளும், 12,000 BS.4 பேருந்துகளும் சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும் படிப்படியாக வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசு Fame india-2 என்ற திட்டத்தின் மூலமாக, 525 மின்சாரப் பேருந்துகளை வாங்கி, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல ஊர்களில் இயக்கிட அனுமதி அளித்துள்ளார்கள். சென்னை மாநகருக்கு 300 மின்சாரப் பேருந்துகள் வழங்கிட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

விரையில் இதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு மொத்தம் 825 மின்சாரப் பேருந்துகள் கிடைக்கும். மத்திய அரசு, ஒரு பேருந்துக்கு தலா ரூபாய் 50 இலட்சம் நிதியுதவி மானியமாக வழங்கும்". என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

தற்போது இயக்கப்படும் மின்சாரப் பேருந்துக்கான கட்டணம் குறித்து?

பரிசோதனை அடிப்படையில் தற்போது இயக்கப்படும் இந்த மின்சாரப் பேருந்துக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.11/- தொடங்கி அதிகபட்சமாக ரூ.25/- வரை வசூலிக்கப்படுகிறது. நிரந்தரமாக இயக்கப்படும் போது, குறைந்தபட்ச கட்டணம் ரூ.15/- என நிர்ணயிக்கப்படும்.

இப்பேருந்துகள் நமது சாலையில் இயக்கவதற்கு ஏற்றதாக உள்ளதா?

இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் சாலைகள் தேசிய அளவிற்கு தரமானதாக உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இணையதள முன்பதிவு எப்பொழுது தொடங்கப்படும்?

இன்று முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கடந்த 3 ஆண்டுகளாக சென்னையிலிருந்தும், மற்ற ஊர்களிலிருந்தும் வெளியூர் செல்லக் கூடியவர்களுக்கு வசதியாக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் எவ்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்திட போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பயணிகள் அதிக அளவில் இருந்ததால் மின்சார ரயில் நிலையத்திலேயே கூடுதல் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

அதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வருடமும் இவ்வசதிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு, பணப்பலன்களை வழங்கிடும் பொருட்டு, இந்த அரசு, நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.1,093 கோடி ஒதுக்கீடு செய்து, உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வரால் வழங்கப்படும்.

டீசலில் இயக்கப்படும் மற்ற பேருந்துகளுக்கும், மின்சாரத்தில் இயக்கப்படும் இப்பேருந்துக்கும் உள்ள எரிபொருள் சிக்கனம் குறித்து?

மின்சாரப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் பொழுதுதான், அதன் மின்சாரப் பயன்பாடு குறித்து அறிய முடியும். குளிர்சாதனப் பேருந்து ஒரு கிலோ மீட்டர் இயங்கிட 1-1/2 யுனிட் மின்சாரம் தேவைப்படும். குளிர்சாதன வசதி இல்லாத பேருந்து ஒரு கிலோ மீட்டர் இயங்கிட 1 யுனிட் மின்சாரம் தேவைப்படும் எனத் தெரிய வருகிறது. பரிசோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் இப்பேருந்துகள், சில வாரங்கள் இயக்கப்பட்ட பின்பு தான் எரிபொருள் சிக்கனம் குறித்து தெரியவரும்.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x