Published : 27 Aug 2019 07:40 PM
Last Updated : 27 Aug 2019 07:40 PM
மதுரை,
மதுரையில் அமையவுள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு துணை இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், நிர்வாகப் பணிகளை விரைவுப்படுத்த மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு துணை இயக்குனர் நியமிக்க, தகுதியுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் அனுப்புமாறு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் எந்த நகரில் ‘எய்ம்ஸ்’ அமைகிறது என்பதற்கான இடம் தேர்வில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை, இந்த விஷயத்தில் தலையிட்டு இடத்தை அறிவிக்க நெருக்கடி கொடுத்ததால் மத்திய அரசு மதுரையில் 'எய்ம்ஸ்' அமையும் என்று அறிவித்தது.
இதையடுத்து, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு பிரதமர் மோடி மதுரைக்கே நேரடியாக வந்து ரூ.1,264 கோடியில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு மக்களவை இடைத்தேர்தல் வந்ததால் 'எய்ம்ஸ்' மருத்துவமனை பணிகள் தாதமானது.
தற்போது மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக 201.75 ஏக்கர் நிலத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு ஒப்படைக்கும் நிர்வாக ரீதியானப் பணிகள் நடக்கின்றன.
இந்த ஒப்படைப்புப் பணியால் 'எய்ம்ஸ்' கட்டுமானப் பணிகள் தாமதமாகக் கூடாது என்பதற்காக அந்த நிலத்தில் கட்டுமானப் பணிக்கான மண் ஆய்வு உள்ளிட்ட இதரப் பணிகளை தொடங்குவதற்கு மத்திய சுகாதாரத் துறைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தடையில்லா சான்று கடிதம் வழங்கியுள்ளார். ஆனாலும், இதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படாததால் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அறிவித்தபடி மதுரையில் அமையுமா? என்ற சந்தேகமும், சர்ச்சையும் எழுந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மதுரை, ஜம்மு, காஷ்மீர், நாக்பூர் உள்ளிட்ட 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடங்களுக்கு நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான துணை இயக்குனரை நியமிக்க உள்ளது. அதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது இணையதளத்தில் துணை இயக்குனர் பணிக்கு
தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதனால், விரைவில் துணை இயக்குனர் பணியளவில் அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால் இந்த அறிவிப்பால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் பணியை மத்திய அரசு வேகப்படுத்த தொடங்கி உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT