Published : 27 Aug 2019 05:07 PM
Last Updated : 27 Aug 2019 05:07 PM
மதுரை,
சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து 4 அடி நீள கம்பி கழுத்தில் குத்தி வெளியே வந்த நிலையில் சிகிச்சைக்கு வந்த இளைஞருக்கு மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
5 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் கம்பியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பங்களாவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குருசாமி (27). இவர், திங்கள் கிழமை இரவு கட்டிட வேலையை முடித்துவிட்டு பைக்கில் நண்பருடன் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
மேலக்கால் ரோடு துவரிமான் அருகே ரோடு விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது. அதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டி போடப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க கான்க்ரீட் போட்டு கம்பிகள் நீண்டு கொண்டிருந்தது.
இந்த பள்ளத்தில் இருவரும் பைக்குடன் தடுமாறி விழுந்துள்ளனர். பள்ளத்தில் நீண்டு கொண்டிருந்த 4 அடி நீளமுள்ள கம்பி குருசாமியின் கழுத்து பின்பகுதியில் குத்தி முன் பகுதி வழியாக வெளியே வந்தது. கம்பியின் ஒரு பகுதி கழுத்தின் பின்பகுதியிலும், மற்றொரு பகுதி கழுத்தின் முன் பகுதியிலும் நீண்டு கொண்டிருந்தது.
இவர்களுடைய கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் பள்ளத்தில் மீட்டனர். கழுத்துப்பகுதியில் குத்திய கம்பியை அறுத்து ரத்தம் சொட்டிய நிலையில் குருசாமியை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனை தலைக்காய சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவே குருசாமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. 5 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கழுத்துப்பகுதியில் குத்திய கும்பியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக கழுத்துப்பகுதியில் குத்திய இந்த கம்பி உணவுக் குழாயை சேதப்படுத்தவில்லை. அதனால், குருசாமியின் உயிருக்கு ஆபத்தில்லாமல் வெற்றிகரமாக இன்று அதிகாலை அறுவை சிகிச்சை முடிந்தது. தற்போது குருசாமி நலமுடன் உள்ளார். ஆனாலும், தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT