Published : 27 Aug 2019 03:18 PM
Last Updated : 27 Aug 2019 03:18 PM
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம், மானாம்பாதியில் வெடி விபத்து ஏற்பட்டு, இருவர் உயிரிழந்த நிலையில், இரும்பு வியாபாரி ஒருவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் திலிபன் ராகவன்(25). நண்பர்களுடன் குளக்கரையில் பிறந்தநாளை கொண்டாடியபோது, அங்கு கிடைத்த வெடிகுண்டை உடைக்க முயன்றபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், பலத்த காயமடைந்த திலிபன் ராகவன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டதில், ராக்கெட் லாஞ்சர் வகையை சேர்ந்த வெடிகுண்டு ஒன்றைக் கைப்பற்றினர். சென்னையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள், அப்பகுதியில் தொடர்ந்து சோதனை செய்தனர்.
இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்ட நிலையில், வேறு வெடிகுண்டுகள் கைப்பற்றப்படாததால் தேடும் பணிகளை போலீஸார் இன்று பிற்பகல் நிறுத்தினர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை அதே பகுதியில் உள்ள ஏரியில் நான்கு அடி பள்ளத்தில் வைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கண்ணன் கூறியதாவது: ’’மானாம்பதியில் வெடிகுண்டு வெடித்துச் சிதறிய இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில், ஒரு வெடிகுண்டு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்றதில் வேறு குண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. சம்பவம் குறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’’ என்றார்.
இதனிடையே, சம்பவ இடத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் தங்கி, பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்த கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகம்மது ரஃபீக் (34) என்பவரை, தனிப்படை போலீஸார் இன்று பிடித்தனர். மேலும், அந்த இடத்தில் வெடிகுண்டு வந்தது எப்படி, இதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT