Last Updated : 26 Aug, 2019 05:44 PM

 

Published : 26 Aug 2019 05:44 PM
Last Updated : 26 Aug 2019 05:44 PM

தீவிரவாத அச்சுறுத்தலால் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் மூடல்

மாமல்லபுரத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ள கலங்கரை விளக்கம்.

மாமல்லபுரம்

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வந்த கலங்கரை விளக்கம் மற்றும் அருங்காட்சியகம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கை வண்ணங்களான குடவரை சிற்பங்கள் மற்றும் கலைச் சின்னங்கள் அமைந்துள்ளன. யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கலைச் சின்னங்களைப் பார்வையிட, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.

கிருஷ்ண மண்டபத்தின் மேல் பகுதியில் உள்ள பாறை குன்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் கலங்கரை விளக்கம், கடலில் வரும் கப்பல்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு புதிய கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை, சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்திப் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் நாசவேலை அச்சுறுத்தல் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இதனால், முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் அணு மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில், அணுமின் நிலையங்கள் செயல்படும் கல்பாக்கம் அருகில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திலும் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருங்காட்சியகம் மற்றும் கலங்கரை விளக்கம் மூடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x