Published : 26 Aug 2019 04:13 PM
Last Updated : 26 Aug 2019 04:13 PM

விஜயகாந்தின் உடல்நிலை: மேடையில் கண்ணீர் சிந்திய மகன் பிரபாகரன்

வேலூர்

தன் தந்தை விஜயகாந்தின் உடல்நிலை குறித்துப் பேசும்போது அவரது மகன் பிரபாகரன் கண் கலங்கி, கண்ணீர் சிந்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், உமராபாத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு, மக்களுக்கு உதவிகளை வழங்கினார் . அப்போது அவர் பேசியதாவது:

''விஜயகாந்த் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 40 ஆண்டுகள் மக்களுக்காகவே உழைத்தவர். இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். மக்களாகிய நீங்கள், அவரை எவ்வளவுதான் தூக்கிப் போட்டாலும் சுவற்றில் அடித்த பந்து போல உங்கள் முன் வந்து நிற்கிறார்.

நேற்று அவரது பிறந்தநாளில் கூட, ரூ.1.5 கோடி செலவு செய்து, அனைத்து மாவட்டங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியைச் செய்துகொடுத்திருக்கிறார். இதையெல்லாம் ஏன் செய்கிறார்? அவருக்கு வெற்றியோ, தோல்வியோ முக்கியமில்லை.

அவருக்கு எப்போதும் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும். அதைத்தான் அவர் நினைக்கிறார். மக்களாகிய நீங்கள் இதுகுறித்து சிந்தியுங்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.

நாங்கள் மன உறுதியுடனேயே இருக்கிறோம். விஜயகாந்த் மீண்டும் சிங்க நடை போட்டு, உங்கள் முன்னால் வந்து நிற்பார். இதை ஆணித்தரமாகக் கூறிக் கொள்கிறேன். ஏனெனில் அவரை எங்களின் கண் இமைகளில் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்காக இல்லை, உங்களுக்காக.

( இதைக்கூறும்போது அவர் கண்ணீர் விட்டார், அப்போது நிர்வாகிகள் பதற்றப்பட்டு அவர் அருகில் வந்து ஆறுதல் கூறினர். அவர் அவர்களை போகச்சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினார்) நான் கலங்கவில்லை. இது எனது ஆனந்தக் கண்ணீர். நீங்கள் யாருமே கலங்கக்கூடாது'' என்று பேசினார் விஜயபிரபாகரன்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x