Published : 19 Jul 2015 01:26 PM
Last Updated : 19 Jul 2015 01:26 PM
ராஜஸ்தானில் இருப்பது போன்று 'வாட்டர் பார்லி மென்ட்' அமைப்பை ஏற்படுத்தினால்தான் தமிழகத்தின் நீர்நிலைகளை அழிவிலிருந்து காக்க முடியும் என்று யோசனை தெரிவித்திருக்கிறது 'பொது நீர்' அமைப்பு.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் கருப்பையா. பிசியோதெர பிஸ்ட்டான இவர், சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நீர்நிலைகளைப் பாதுகாத்தல், தண்ணீர் பிரச்சி னைக்குத் தீர்வு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இதற்காக 2011-ல் இவர் தொடங்கிய அமைப்புதான் 'பொது நீர்'.
இந்த அமைப்பில் தலைவர், செயலாளர் பதவிகள் இல்லை. அந்தந்த ஊரின் பிரச்சினையை அந்தந்த ஊர் மக்களின் அறிவைக் கொண்டே தீர்க்க வேண்டும் என்பது தான் 'பொது நீரி'ன் கொள்கை என்பதால் பிரச்சினையை பொறுத்து அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களே 'பொது நீரு'-க்கு தலைவராக இருப்பார்கள்.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப் பில் தற்சமயம் 40 இளைஞர்கள் இருக்கிறார்கள். ராமநாதபுரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங் களில் பொதுமக்களை உள்ளடக் கிய குழுக்களும் இயங்குகின்றன. அக்டோபர் 2013-ல் 'ஊருணிக்காக ஓரணியில்' என்ற முழக்கத்துடன் ராமநாதபுரத்தில் உள்ள முகவை ஊருணியின் ஒரு பகுதியை ஆயிரம் பேரைத் திரட்டி தூர்வாரியது 'பொது நீர்'அமைப்பு.
இந்த நிலையில், நீர்நிலைகள் பாதுகாப்பது குறித்து 'தி இந்து' விடம் பேசிய ரமேஷ் கருப்பையா கூறியதாவது:
''தண்ணீர்தான் உயிர்களின் தோற்றுவாய். அதைக் கட்டுப்படுத் தினால் உயிர்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாது. நீரைப் பகிர்ந்து கொள்ளும் சமூகமே நீதியை பகிர்ந்து கொள்ளும். நதிகளை ஒட்டித்தான் அன்றைக்கு மனிதன் குடியேறினான். நம் முன்னோர்கள் முதலில் நீர்நிலைகளை அமைத்த பிறகுதான் கிராமங்களை உருவாக் கினார்கள். நீரை எப்படி சேமிப்பது, எப்படி பயன்படுத்துவது என்று அவர்கள் கடைபிடித்த நீர் மேலாண்மை இப்போது இல்லை.
மக்களின் வாழ்வாதாரமான நீரை பொதுப்பணித் துறை என்ற பெயரில் அரசு பறித்துவிட்டது. அப்படி பறித்தவர்களும் அதை முறையாக பராமரிக்காமல் நீர் நிலைகளில் கருவை மரங்களை நட்டு நாசப்படுத்துகிறார்கள். ஏரி மண்ணை வயலுக்கும் மண் பாண்டங்கள் செய்யவும் எடுத்துக் கொள்ள மக்களுக்கு இருந்த உரிமையையும் கனிம வளத்துறை பறித்துக் கொண்டு விட்டது.
இதனால், பொது நீர்நிலைகளி லிருந்து மக்கள் அந்நியப்பட்டுக் கிடக்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 39 ஆயிரம் நீர்நிலைகள் இருப்பதாக பொதுப்பணித்துறை சொல்கிறது. நிச்சயமாக இது ஏட்டுக் கணக்காகத்தான் இருக்கும். 1960-க்குப் பிறகு நீர்நிலைகளை அழிப்பதில் அரசே அதிவேகம் காட்டி வருகிறது.
அரசு சார்ந்த கட்டிடங்களுக்கு இடம் தேவை என்றால் நீர்நிலை களைத்தான் தூர்க்கிறார்கள். வள் ளுவர் கோட்டம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை கட்டிடம் உள்ளிட் டவைகளே இதற்கு உதாரணம்.
அண்மையில்கூட பரமக்குடி அருகே தீயனூர் கிராமத்தில் கண்மாய்க்குள் 300 ஏக்கரை ஆக்கி ரமித்து சூரியஒளி மின்சாரத்துக் காக 'சோலார் பேனல்' அமைத் திருக்கிறார்கள். இப்படி தொடர்ச் சியாக நீர்நிலைகள் அழிக்கப்படும் சூழல் மாறவேண்டுமானால் எந்த சக்தியும் குறுக்கிட முடியாத பொது அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் நீர்நிலைகள் வர வேண்டும்.
ராஜஸ்தானில் சில பகுதிகளில் 'ராஜஸ்தானின் தண்ணீர் மனிதர்' என்று சொல்லப்படும் ராஜேந்தர் சிங் தலைமையில் செயல்படும் 'வாட்டர் பார்லிமென்ட்' என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் நீர்நிலைகள் உள்ளன. அவர்களுடைய ஆளு மைத் திறனை மீறி அந்தப் பகுதி களில் அரசாங்கம்கூட நீர்மேலாண் மையில் தலையிட முடியாது. அதுபோன்ற ஒரு அமைப்பை தமிழகத்திலும் ஏற்படுத்தினால்தான் எஞ்சி இருக்கும் நீர்நிலைகளாவது காப்பாற்றப்படும்'' என்றார்.
8,600 நீர்நிலைகளை உருவாக்கியவர்
ராஜஸ்தானின் ஆரவல்லி குன்றுகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் மேலாண்மையை சொல்லிக் கொடுத்தவர் ராஜேந்திர சிங். சமுதாய தலைமைக்காக 2001-ல் 'ராமன் மகசேசே விருது' பெற்ற இவர், ராஜஸ்தான் மலைப்பிரதேசத்தில் பொது மக்கள் துணையோடு தடுப்பு அணைகளை கட்டி நீரைத் தேக்கியவர். இவர் நடத்தி வரும் 'தருண் பாரத் சங்கம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 8600 நீர்நிலைகளை உருவாக்கி பராமரித்தும் வருகிறது.
இந்த அமைப்பு, ராஜஸ்தானில் வறண்டு கிடந்த ஐந்து நதிகளுக்கு உயிரூட்டி மீண்டும் நீரை ஓடவைத்திருக்கிறது. தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி 2002-ல் வட மற்றும் தென் மாநிலங்களில் 144 ஆற்றுப்படுகைகள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராஜேந்திர சிங், அப்போது ஐந்து இடங்களில் தேசிய தண்ணீர் மாநாடுகளையும் நடத்தினார். 'பாணி பஞ்சாயத்' என்று சொல்லப்படும் 'வாட்டர் பார்லிமென்ட்' மூலம் ராஜஸ்தானின் தொலைதூர கிராமங்களில் நீர்நிலைகளை உருவாக்கியும் பராமரித்தும் வருகிறது இவரது தருண் பாரத் சங்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT