Published : 22 Aug 2019 01:51 PM
Last Updated : 22 Aug 2019 01:51 PM
விருதுநகர்,
பட்டாசு தொழிலுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று பசுமை பட்டாசு ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த நாக்பூர் நீரி(NEERI) அமைப்பின் சோதனை தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. அது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதில் நீரி அமைப்பின் இயக்குநர் மற்றும் மூத்த விஞ்ஞானி ஒருவரும் கலந்து கொண்டனர். ஆய்வுகூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, "பசுமை பட்டாசு தயாரிப்பு தொடர்பான சோதனை தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
பட்டாசில் கலக்கப்படும் பேரியம் நைட்ரேட்டின் அளவைக் குறைத்து மாற்று பொருட்கள் சேர்த்து மாசை குறைத்து பசுமை பட்டாசுகள் தயாரிக்கலாம். அது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் பட்டாசு தொழிலுக்கு விடிவுகாலம் வரும். இந்த செய்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியிலும் பட்டாசு தொழிலாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் மூலம் நீரி அமைப்பு நல்ல முடிவை எடுத்ததால் இந்தியாவில் உள்ள 1.5 கோடி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்படும்.
தனியார் கல்லூரியில் நடைபெறும் சோதனை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து அனைத்து லைசென்சும் பெற்று முறையான உரிமம் பெற்ற பின் பட்டாசு தயாரிக்கலாம். இதற்கு காரணம் தமிழக அரசின் நடவடிக்கையும் மத்திய அரசின் ஒத்துழைப்பும்தான்" என்றார்.
தொடர்ந்து, பசுமை பட்டாசுகள் தயாரிப்பு குறித்த ஆய்வுகள் பல இடங்களில் நடைபெற்றன எந்த முடிவுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பேரியம் நைட்ரேட்டின் அளவு 50% சேர்க்க வேண்டியிருந்தால் 20% மாற்று பொருட்கள் சேர்க்கும் போது பசுமை பட்டாசுகள் தயாரிக்க முடியும் என்ற முடிவை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதையே உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளோம். இதன்மூலம் பட்டாசு தொழிலுக்கான தடை நீங்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT