Published : 22 Aug 2019 12:50 PM
Last Updated : 22 Aug 2019 12:50 PM
சிவகங்கை,
ஒரே நாடு; ஒரே கட்சி என்ற பாஜகவின் போக்கு கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழக அரசு குடிமமராமத்துப் பணிகளை செய்துவருவதாக முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் வரை சொல்கின்றனர். ஆனால், தூர்வாருதல், கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை ஜூன், ஜூலை ஆகஸ்ட் பருவமழை காலத்திற்கு முன்னதாக இடைப்பட்ட ஐந்து மாத அவகாசத்தில் செய்திருக்கலாமே! அதை செய்யாமல் தற்பொழுது மழைக்காலம் துவங்கிய நிலையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரைகுறையாக பணிகளை செய்வதோடு அதற்கான நிதியை விடுவிப்பதற்கான 'பில் பாஸ்' பண்ணும் பணிகள்தான் நடக்கிறது.
தமிழக முதல்வருக்கு நேரடியாக ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் எத்தனை இடங்களில் நடக்கின்றன? அதற்கான நிதி ஒதுக்கீட்டை எந்த தேதியில் தொடங்கி எந்த தேதியில் முடிக்க வேண்டும்? என்பன குறித்து பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?" என்றார்.
சிதம்பரம் கைது திசைதிருப்பும் நடவடிக்கை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்த கேள்விக்கு, "காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய அரசு கூறுகிறது.
ஆனால் அங்கு கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. முக்கிய தலைவர்களான குலாம்நபி ஆசாத் தேசிய செயலாளர் டி.ராஜா போன்ற தலைவர்கள் அங்கு சென்றுவர அனுமதிப்பதில்லை. தோழமை கட்சியினர் இது குறித்து கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வது இல்லை. உண்மையில், காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
ஒரே நாடு ஒரே கட்சி சரியல்ல..
தெலுங்கானா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்கள் பாஜகவுக்கு தாவியது தொடர்பான கேள்விக்கு, "ஒரே நாடு ஒரே கட்சி என்ற பாஜகவின் போக்கு கண்டிக்கத்தக்கது. மற்ற கட்சிகளை பாஜக அழிக்க நினைக்கிறது. அதிக பலத்தோடு ஆட்சி வந்ததும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலோ சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையை பாஜக அரசு உருவாக்குகிறது" என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT