Last Updated : 22 Aug, 2019 10:25 AM

2  

Published : 22 Aug 2019 10:25 AM
Last Updated : 22 Aug 2019 10:25 AM

மோடி, அமித் ஷா, சிபிஐ தலைவரின் கூட்டு சதிக்கு உச்ச நீதிமன்றமும் துணை: சிதம்பரம் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்

தூத்துக்குடி,

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிபிஐ தலைவர் ஆகியோரின் கூட்டு சதிக்கு உச்ச நீதிமன்றமும் துணைபோய் உள்ளது என சிதம்பரம் கைதுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நெல்லையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை. அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமித்ஷா கைது செய்யப்பட்டார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதற்கு பழித்தீர்த்து கொள்வதற்காக அமித்ஷா, பிரதமர் மோடி, சிபிஐ புலனாய்வுத் துறையை ஏவி இந்த பழிவாங்கும் நடவடிக்கையை நடத்தியுள்ளார்கள்.

ப.சிதம்பரம் ஓடி ஒளிந்துவிட்டார், தலைமறைவாகிவிட்டார் என திட்டமிட்டு மத்திய அரசு வதந்தி பரப்பியது. ஆனால் ஏற்கனவே சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஐ.என்‌.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கு அவசர வழக்காக எடுக்கக்கோரி சட்டபூர்வமாக அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வழக்கை விசாரிப்பதாக சொன்ன நீதிபதி மாலை 4 மணிக்கு மேல் காணாமல் போய்விட்டார்.

இதிலிருந்து உச்ச நீதிமன்றத்தையும் இன்று உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து முன் ஜாமீன் வழங்கி சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் நிச்சயமாக விசாரணைக்கு தானே முன்வந்து ப.சிதம்பரம் ஒத்துழைப்பு நல்கி இருப்பார்.

ஆனால் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்வதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. அவர் வீட்டில் தான் உள்ளார் என தெரிந்த பிறகு வீட்டை முற்றுகையிட்டாலே போதுமானது. எந்த நேரத்திலும் அவர் வெளியேற முடியாது. கைது செய்திருக்கலாம். ஆனால் அவரை இவ்வளவு அவசரம் அவசரமாக கைது செய்வதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆகவே அவர் அநாகரிகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி.

ஆகவே சிபிஐ தலைமை அதிகாரி, மோடி, அமித் ஷா ஆகியோரின் கூட்டுச் சதியாலும் உச்ச நீதிமன்றத்தின் துணையோடும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டிருகிறார்.

இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். பாஜ.அரசு எந்த மரபுகளையும் பின்பற்றத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தையும், இன்றைக்கு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட அணுகுமுறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் எதேச்சதிகார போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். நாடு எந்த திசையில் போய்க்கொண்டு இருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட செயலுக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவிப்பதிருப்பது வேடிக்கையான ஒன்று. பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு இதை நடத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இதை செய்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் தொடர்ந்து மோடி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர்களில் ப. சிதம்பரமும் ஒருவர். குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, போன்ற நடவடிக்கைகளை இந்திய பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது என்பதை அவர் தொடர்ச்சியாக நாளேடுகளில், கட்டுரைகளில் வெளியிட்டார். மோடி அரசின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார். அதற்காகவே திட்டமிட்டு இந்த நடவடிக்கைகளை பா.ஜ அரசு எடுத்துள்ளது.

விஜய் மல்லையா மற்றும் இன்னும் பல கிரிமினல் குற்றவாளிகளை தப்பிக்க விட்டவர்கள்; அவர்களை தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காதவர்கள்; கைது செய்ய எந்த முனைப்பும் காட்டாதவர்கள் இதில் இவ்வளவு அவசரம் காட்டியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

அணுசக்திக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராடி கொண்டிருக்கும் நிலையில் அந்த அமைப்புகளோடு சேர்ந்து கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலை அமைப்பதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை கண்டித்து ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x