Published : 21 Aug 2019 05:38 PM
Last Updated : 21 Aug 2019 05:38 PM
சென்னை
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அம்மாநிலத்தின் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தடை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனிநபரான எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும், யூனியன் பிரதேச அரசுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அரசியல் சாசனம் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், தனி நீதிபதி தவறான முறையில் தீர்ப்பளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் இன்று (ஆக.21) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, அரசியல் சாசன பிரிவுகளையும், விதிகளையும் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அதேசமயம், எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாகவும் , டெல்லி உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க லட்சுமி நாரயணன், கிரண்பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT