Published : 21 Aug 2019 05:34 PM
Last Updated : 21 Aug 2019 05:34 PM
சென்னை
ப.சிதம்பரம் ஊழல் செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கான முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரை கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ப.சிதம்பரம் ஊழல் செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் இன்று (ஆக.21) மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், வடிகால்கள், தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளில் கட்சியினருடன் ஈடுபட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "ப.சிதம்பரம் விஷயத்தில் விஜயகாந்த் சொன்னதுதான் எங்கள் கருத்து. உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். யாராக இருந்தாலும் சரி. ஊழல் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். பல ஆண்டுகளாக நிதியமைச்சராக இருந்தபோது, தமிழகத்திற்கு ப.சிதம்பரத்தால் ஏதேனும் பெரிய திட்டம் கொண்டு வரப்பட்டதா? என்ன செய்திருக்கிறார்? ஊழல் வழக்கில்தான் சிக்கியிருக்கிறார்" என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT