Last Updated : 21 Aug, 2019 11:44 AM

 

Published : 21 Aug 2019 11:44 AM
Last Updated : 21 Aug 2019 11:44 AM

பாதசாரிகளுக்கு உதவ போக்குவரத்து சிக்னலில் தானியங்கி 'இசைக்கருவிகள்': மதுரை காவல்துறை புதிய திட்டம்

மதுரை

மதுரை நகரில் பாதசாரிகளுக்கு குறிப்பாக பார்வையற்ற நபர்களுக்கு உதவ போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இசைக் கருவிகள் பொருத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழக காவல்துறையில் நவீனமாக்கல் திட்டத்தின் கீழ், பல்வேறு புதிய நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. பூட்டிய வீடுகளை கண்காணிக்க சிசிடிவி, போக்குவரத்து சிக்னல், சோதனை சாவடிகளில் விதியை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, அவற்றின் பதிவெண், வாகன ஓட்டிகளை துல்லியமாக படமெடுக்கும் கேமராக்கள், விதிகளை மீறுவோரிடம் அபராத தொகையை பெற டிஜிட்டல் இ- சலான் மிஷன்கள் என, தொடர்ந்து காவல்துறையில் தற்போதைய வளர்ச்சிக்கேற்ப பொதுமக்கள் காவல்துறை எளிதில் அணுக தேவையான வசதிகளை மேற்கொள்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களை நடந்து கடக்கும் பொதுமக்கள், குறிப்பாக பார்வை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இசை மூலம் அறிவுறுத்தும் கருவிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மதுரையிலும் முக்கியமான போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு இசை கருவிகளை பொருத்த நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்பாடு செய்கிறார். இதற்கான ஆய்வை போக்குவரத்து போலீஸாரு டன் இணைந்து தொழில்நுட்ப பிரிவு காவல் துறையினர் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஓரிரு மாதத்தில் மதுரை நகரில் தேவையான போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இசைக்கருவிகள் பொருத்தப்படும் என, போக்குவரத்து காவல் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதுரை நகரில் 100-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் செயல்படுகின்றன. காளவாசல், கோரிப்பாளையம், கீழவாசல், பெரியார் பேருந்து நிலையம் உட்பட சில முக்கிய போக்குவரத்து நிமிடத்திற்கு ஆயிரக் கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. இவற்றில் சில சிக்னல்களில் மட்டும் பொது மக்கள் ரோட்டை கடக்க, குறித்த நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பாதசாரிகள் சாலையை கடக்கின்றனர்.

இருப்பினும், பார்வையிழந்தவர்களுக்கு உதவும் வகையில் சிக்னல்களில் தானியங்கி இசைக்கருவிகள் பொருத்துவது மக்களுக்கு எளிதாக இருக்கும் என, நம்புகிறோம். முன்கூட்டியே அதற்கான நேரத்தை எச்சரித்து விட்டு கருவிகள் இசைக்க தொடங்கும் வகையில் வடிவமைக்கப்படும். இது பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கையின் சமர்ப்பிக்கப்பட உள்ளோம்.

இதன்பின், காவல்துறை நிதியில் அல்லது நன்கொடையாளர்கள் மூலம் இசைக் கருவிகள் பொருத்துவது பற்றி முடிவெடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x