Published : 21 Aug 2019 10:58 AM
Last Updated : 21 Aug 2019 10:58 AM
தருமபுரி/கிருஷ்ணகிரி
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. காவேரிப்பட்டணத்தில் பெய்த கனமழையால் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, பெனு கொண் டாபுரம், ஊத்தங்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப்பகுதியில் இரவு 11 மணியளவில் பெய்த கனமழையால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, தாளமடுவில் இருந்து மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி ஊராட்சி வழியாக, காவேரிப்பட்டணம் வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இக்கால்வாயில் ஆக்கிரமிப் புகள், அடைப்புகள் அதிகளவில் இருந்ததால், எம்ஜிஆர் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 50 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியுற்றனர். இதில், கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு சேதமானது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், ஜேசிபி வாகனம் உதவியுடன் கால்வாயில் இருந்த அடைப்புகளை அகற்றினர்.
இதனைத் தொடர்ந்து கால்வாய் வழியாக தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘‘ஆக்கிரமிப்பு மற்றும் அதிகளவில் குப்பைக் கழிவுகள் இருந்ததால் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. கால்வாயை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்,‘‘ என்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பாரூர் 33.6, கிருஷ்ணகிரி 40.2, பெனுகொண்டாபுரம் 71.3, சூளகிரி 8, நெடுங்கல் 49, ராயக்கோட்டை 83, போச்சம்பள்ளி 56.4 மி.மீ.
நீர்மட்டம் சரிவு
கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 36.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 976 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 675 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. அணை பாசனப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால், பாசனக்கால்வாய்களில் நீர் திறப்பு விநாடிக்கு 12 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 34.10 கனஅடியாக உயர்ந்தது.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் லேசான தூறலும், இரவில் மிதமானது முதல் கனமழை வரையிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அதிகபட்சமாக 24 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தருமபுரியில் 21 மி.மீட்டர், பென்னாகரத்தில் 15 மி.மீட்டர், பாலக்கோட்டில் 12 மி.மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டியில் 3.2 மி.மீட்டர், ஒகேனக்கல்லில் 1.2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாரண்டஅள்ளி பகுதியில் மட்டும் லேசான தூறல் மட்டுமே விழுந்தது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுக்க பரவலாக பெய்து வரும் மழை, விவசாயிகள் உள்ளிட்டோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT