Published : 20 Aug 2019 04:23 PM
Last Updated : 20 Aug 2019 04:23 PM
மதுரை,
எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சாப்பாடும், சிகிச்சையும் கிடைக்காமல் மதுரை தத்தனேரி மயானத்தில் உயிருக்குப் போராடிய பரிதாபம் நடந்துள்ளது.
ஆதரவற்ற எச்ஐவி நோயாளிகளைப் பராமரிக்க அரசு காப்பகங்கள் இல்லாததால் அவர்கள் சாலையோரங்களில் சாப்பாடு, சிகிச்சை இல்லாமல் இறக்கும் பரிதாபம் அதிகரித்துள்ளது.
மதுரையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், எரியூட்டுவதற்கும் மிகப்பழமையான தத்தனேரி மயானம் உள்ளது. தமிழகத்தின் பெரிய மயானங்களில் இதுவும் ஒன்று. இங்கு தினமும் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரியூட்டவும், அடக்கமும் செய்யப்படுகின்றன.
24 மணிநேரமும் செயல்படும் இந்த மயானத்தில் நேற்று(திங்கள்கிழமை) அதிகாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், முனகல் சத்தத்துடன் உயிருக்குப் போராடியபடி கிடந்தார்.
மயான ஊழியர்கள் அவரிடம் விசாரித்தனர். அந்தப் பெண்ணால் பேச முடியவில்லை. உடனே ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்ய உதவும் மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.பி.மணிகண்டனிடம் கூறியுள்ளனர்.
அவரும், மதுரை எல்லீஸ் நகரில் கைவிடப்பட்ட பெண்களுக்காக நடத்தப்படும் மனநலக் காப்பக நிர்வாகி குளோரியும் தன்னார்வலர்களுடன் சென்று மயானத்தில் கிடந்த பெண்ணை மீட்டனர்.
அவரது கையில் மதுரை தோப்பூர் காசநோய் மையத்தில் சிகிச்சை பெற்ற மருத்துவ அட்டையும், மதுரை அரசு மருத்துவமனை ஏஆர்டி மையத்தில் எச்ஐவி நோய்க்கு சிகிச்சை பெற்ற அட்டையும் வைத்திருந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பகத்திற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி மாற்றுத்துணிகளை உடுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண் தனது கணவரும் எச்ஐவி நோயால் இறந்துவிட்டதாகவும், அவர் மூலம் தனக்கு எச்ஐவி நோய் வந்ததையும் தெரிவித்தார். ஒரு மகள் இருப்பதாகவும், அவரைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டதாகவும், அவர்கள் இவரைக் கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் கூறினார்.
இதனால், கடந்த சில நாளாகவே இவர் சாப்பிடாமல் சாலையோரங்களில் சுற்றித்திரிந்தால் உடல் சோர்வாகி உயிருக்குப் போராடியுள்ளார்.
மதுரையில் ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள எச்ஐவி நோயாளிகளைப் பராமரிக்க அரசு மற்றும் தனியாரில் எந்தக் காப்பகங்களும் இல்லை. அதனால், மனநலக் காப்பக உரிமையாளர் குளோரி, தனது காப்பகத்திலே தற்போது அந்தப் பெண்ணை பராமரித்து வருகிறார்.
அவர் கூறுகையில், "கடந்த 5 ஆண்டிற்கு முன் வரை இறக்கும் தருவாயில் உள்ள எச்ஐவி நோயாளிகளைப் பராமரிக்க தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் காப்பகங்களை நடத்தி வந்தது.அந்த நோயாளிகள் கடைசி காலம் முதல் அவர்கள் இறுதிச் சடங்கு வரை பராமரிக்கப்பட்டனர்.
தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்டால் அரவணைக்க காப்பகங்கள் இல்லாமல் இவரைப் போன்ற குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற எச்ஐவி நோயாளிகள் சாப்பாடும், சிகிச்சையும் கிடைக்காமல் சாலைகளிலே இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT