Published : 14 Jul 2015 09:44 AM
Last Updated : 14 Jul 2015 09:44 AM

முனைவர் பட்ட விவகாரம்: பாரதியார் பல்கலை. பேராசிரியர்கள் மீது ஆட்சியரிடம் கேரள பெண் நேரில் புகார்

முனைவர் பட்டம் பெறுவது தொடர்பாக பாரதியார் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மூவர் மீது கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மனுநீதி நாளான நேற்று, கோவை ஆட்சியரிடம் கேரள மாநிலம், பாலக்காடு ஒலவக்கோட்டையைச் சேர்ந்த எல்சம்மா சபாஷ்டின் (52) என்ற பெண் புகார் மனு அளித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘நான் 2009-ம் ஆண்டு தொடங்கி, 2015-ம் ஆண்டு வரை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற பயின்றேன். அதற்கான வைவாவின்போது அதை நடத்திய கல்வியாளர் (பெயர் குறிப்பிட்டுள்ளார்) ரூ.2 லட்சம் கேட்டார். இது குறித்து மேலிடத்தில் புகார் செய்து லஞ்சம் தருவதை தவிர்த்தேன்.

மற்றொரு கல்வியாளர் முன்னிலையில் வைவா, பிப்ரவரி 27-ம் தேதி முடிக்கப்பட்டது. ஆனால், பட்டம் தர பல்கலைக்கழகம் இழுத்தடித்து வருகிறது. பட்டம் பெற வேண்டுமானால் திரும்பவும் வைவாவில் பங்கேற்க வேண்டும் என்று ரூ.2 லட்சம் கேட்ட கல்வியாளர், தொடர்ந்து இரவு 11 மணிக்குகூட தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்கிறார். அந்த தொலைபேசி அழைப்புகளை நான் பதிவிட்டு வைத்துள்ளேன். இதுகுறித்து ஆளுநர் வரை புகார் செய்துள்ளேன்’ என்றார்.

ஆட்சியரிடம் அளித்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 3 கல்வியாளர்கள் மீது எல்சம்மா புகார் தெரிவித்திருக்கிறார். அதில் குறிப்பிட்ட கல்வியாளர்களை தொடர்பு கொண்டபோது, ‘தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. புகாரை, பல்கலைக்கழக நிர்வாகம் பார்த்துக்கொள்ளும்’ என்று ஒருவர் தெரிவித்தார். இன்னொருவர் தொலைபேசியை எடுக்கவில்லை. மற்றொருவரின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந் தது.

சில நாட்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மீது முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மாணவி அனிதா ராஜன் என்ற பெண் பாலியல் ரீதியான நிர்ப்பந்தம் கொடுப்பதாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x