Published : 19 Aug 2019 04:06 PM
Last Updated : 19 Aug 2019 04:06 PM
திண்டுக்கல்,
மோட்டார் வாகன உற்பத்தி, விற்பனையில் தேக்கநிலை என்பது தற்காலிகமானதே. கூடிய விரைவில் மீண்டும் மிகப்பெரிய வளர்ச்சி என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த அமையக்கூடிய ஆட்சி பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் ஒரு ஆட்சியாக தான் அமையும் என்றும் அவர் பேசினார்.
பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஆக.19) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சில தொழில் ரீதியான மாற்றங்களை முன்னெடுத்து வைக்கும்போது அதில் தற்காலிகமான சில கடின சூழ்நிலைகள் உருவாவது என்பது எல்லா காலத்திலும் உண்டு. இது எல்லா ஆட்சியிலும் ஏற்படக்கூடிய விஷயம்.
இப்பொழுது ஏற்பட்டிருக்ககூடிய மோட்டார் வாகன உற்பத்தி, விற்பனையில் தேக்கநிலை என்பது தற்காலிகமானதே. கூடிய விரைவில் மீண்டும் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்ல இருக்கிறது. நவீனமயமாக்கப்பட்ட, சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பில்லாத வாகனங்களைத் தயாரிக்கும் முன்னெடுப்பில் நாம் இருக்கிறோம். எனவே இதை ஒரு பின்னடைவாகக் கருதத் தேவையில்லை" என்றார்.
பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சியே அமையும்:
ஆவின் பால் விலை உயர்வை குறிப்பிட்டுப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "மக்களைப் பாதிக்காத வகையில் விலையேற்றம் இருக்கவேண்டும். அதேநேரத்தில் பொருளை விற்பவர்களுக்கு விலையும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. விலையேற்றம் என்பதை இருதரப்பினரும் பாதிக்காதவகையில் செய்யவேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு கட்சி ஆட்சி தமிழகத்தில் உள்ளது. இதில் சரிசெய்யவேண்டிய விஷயம் நிறைய உள்ளது. அதை நோக்கி இந்த அரசாங்கம் பயணிக்க வேண்டும்.
தமிழகத்தில் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் இல்லை. தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. இதனால் அடுத்ததாக தமிழகத்தில் ஏற்படக்கூடிய ஆட்சி பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் ஒரு ஆட்சியாகத் தான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். சாதி ரீதியாக கையில் கயிறு கட்டுவதை எந்த சாதியினராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் கயிறு கட்டுவதை ஒரு குறையாக சொல்வதையும் ஏற்றுக்கொள்ள இயலாது" என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT