Published : 19 Aug 2019 03:09 PM
Last Updated : 19 Aug 2019 03:09 PM
புதுக்கோட்டை,
தற்கொலை செய்து கொள்பவர்களில் அதிகமானோர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதால் எலி மருந்தை தடை செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்கொலை செய்து கொள்பவர்களில் அதிகமானோர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதால் அவர்களை உயிர் பிழைக்க வைப்பது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
எலி மருந்து கொடிய விஷத்தன்மை கொண்டதாக உள்ளது. எலி மருந்துக்கு தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும்" என்றார்.
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக செவித்திறன் சவால் உடையவர்களுக்கு இலவசமாக செவித்திறன் கருவிகளை வழங்கினார்.
19% சதவீதமாக அதிகரிப்பு..
தொடர்ந்து பேசிய அவர், "அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்கள் எண்ணிக்கை 2 சதவீதத்தில் இருந்து 19% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு தமிழக அரசு எடுத்த முயற்சிகளே காரணம்.
மாவட்ட மருத்துவமனைகள் தொடங்கி தாலுகா மருத்துவமனைகள் வரை 1000 இயந்திரங்களை வழங்கியதன் விளைவாக அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சினை என்பதே கிடையாது. இதனால் டயாலிசிஸ் செய்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் தனி பிரிவு அமைக்கப்பட்டு டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT