Published : 08 Jul 2015 02:17 PM
Last Updated : 08 Jul 2015 02:17 PM

மின் வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழலா?- ஜெ. விளக்கம் அளிக்க கருணாநிதி வலியுறுத்தல்

மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக மக்கள் மன்றத்தின் முன்பு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதாவின் முக்கிய அறிவிப்பு ஒன்று ஏடுகளில் வெளிவந்துள்ளது. அதில், சென்னை - ராதாகிருஷ்ண நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கழகம் பெற்றிருக்கும் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், அதிமுக ஆட்சியின் நான்காண்டு கால ஆட்சி சாதனைகளை விளக்கியும் பொதுக் கூட்டங்களை நடத்துமாறு அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அதிமுக அரசின் சாதனைகளின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பட்டியலில் முதல் இடம் பெற்றிருப்பது மின்துறையில் அவர் செய்திருக்கும் சாதனைகளைப் பற்றியதுதான். மின் துறையைப் பற்றி ஜெயலலிதா தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஜெயலலிதாவின் அறிக்கை வெளிவந்த அதே ஏடுகளில், சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு பற்றி வெளிவந்துள்ள செய்தியும் முக்கியமானதாகும்.

'தி இந்து' ஆங்கில நாளிதழ் அந்தச் செய்தியைத் தொடங்கும்போதே, "மாநில அரசுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்குகின்ற வகையில், சென்னை உயர் நீதி மன்றம், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஊழல் முறைகேடுகள் பற்றிய தணிக்கைத் துறை அறிக்கையினைத் தாக்கல் செய்யும்படி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம் கூறியிருக்கிறது" என்று எழுதியுள்ளது.

இந்த வழக்கு குறித்து மற்றொரு ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு ஒன்றில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் இருந்த சில அதிகாரிகள், தமிழகத்தில் செயற்கையான முறையில் மின்சாரத் தட்டுப்பாட்டை

ஏற்படுத்தும் நோக்கில், புதிய மின் திட்டங்கள் உருவாவதைத் தடுத்தார்கள்; ஏற்கனவே பணிகள் நடைபெற்று வந்த மின் திட்டங்களைத் தாமதப்படுத்தினார்கள்; இப்படி அரசின் மின் உற்பத்தித் திட்டங்களைத் தாமதப்படுத்தியும், தடுத்தும் செயற்கையான மின் பற்றாக்குறையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட்டு, அதைச் சரிக்கட்ட, தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து அபரிமிதமான விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனுதாரர் தனது வழக்கில், "தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து, நீண்ட காலத்திற்கு, மின்சாரம் வாங்குவதற்காக, மாநில அரசுக்குச் சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்களில் இடையிடையே மின் உற்பத்தியை நிறுத்தி, மின் பற்றாக்குறையைச் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். மேலும், அரசு மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதே ஒரு யூனிட் மின்சாரத்தை 15 ரூபாய்க்குத் தனியாரிடமிருந்து அரசு வாங்கியுள்ளது" என்றெல்லாம் தனது புகார் மனுவில் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

"காற்றாலை மின் பிரிவின் மூலமாக மட்டும் 24,309 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கையாடல் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின்சார மீட்டர்கள் வாங்குவதில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த முறைகேடுகளுக்குப் பிறகு 4,500 கோடி ரூபாய்க்கு மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். இந்த முறைகேடுகளின் மூலம் செயற்கையாக மின்சார மீட்டர் பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள்" என்றெல்லாம் புகாரில் தெரிவிக்கும் அந்த மின்வாரிய அலுவலர், முடிவாகக் கூறும்போது, "தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய ஊழல் - ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் இதுதான் என்பதால், அதன் மீது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை ஏற்படுத்தப் படவேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அலுவலரே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இப்படியெல்லாம் பகிரங்கமாகவும், தைரியமாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறியிருப்பதைப் பார்த்துத் தான், அவற்றில் பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி கவுல், நீதியரசர் சிவஞானம் ஆகியோர், தணிக்கைத் துறைத் தலைவர் மின்சார வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து என்ன அறிக்கை கொடுத்துள்ளார், எந்த அளவுக்கு மின்வாரியத்தின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பன போன்ற ஏராளமான கேள்விகளை எழுப்பியதோடு, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உயர் நீதி மன்ற ஆய்வுக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

உண்மை இவ்வாறிருக்க, "முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல" முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மின்வாரியத்தில் தனது ஆட்சியில் ஏராளமான சாதனைகளைச் செய்திருப்பதாக அறிக்கை கொடுத்திருப்பது தான் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

மின்சார வாரிய மெகா ஊழல் தொடர்பான இந்தப் பொதுநல மனுவுக்கு தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் உரிய விளக்கம் அளித்திடும் அதே வேளையில், முதல்வர் ஜெயலலிதா மக்கள் மன்றத்தின் முன் இதற்கான விளக்கத்தை அளிக்க முன் வருவது தான், "மக்கள் முதல்வர்" என்று சில நாள் தன்னை அழைத்துக் கொண்டாரே, அதற்குப் பொருத்தமாக இருக்கும்!" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x