Published : 18 Aug 2019 02:38 PM
Last Updated : 18 Aug 2019 02:38 PM
சென்னை,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட வடமாவட்டங்களில் அடுத்து எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற கேள்விக்கு் தமிழ்நாடு வெதர்மேன் பதில் அளித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரங்களில் கேரளா, கர்நாடகம், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. அங்கு தற்போது மழை குறைந்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி கடலூர் மாவட்டங்களில் நேற்றுமுதல் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்தது.
இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காற்றில்லாமல் பலத்த மழை பெய்தது. இதனால் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையாறு, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மறைமலை நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்க நல்லூர், நீலாங்கரை, திருவான்மியூர், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, உள்பட பல இடங்களில் காலை நல்ல மழை பெய்ததால் சாலையில் மழைநீர் ஓடியது.
கடந்த 2013-ம் ஆண்டுக்குப்பின் சென்னையில் பகல்நேரத்தில் இதுபோன்று மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணி அளவு நிலவரப்படி காட்டாங்குளத்தூரில் அதிகபட்சமாக 87 மி.மீ மழை பெய்துள்ளது. மதுராந்தகம் ஏரியில் 68 மி.மீ, பெரம்பூர் 58மி.மீ, செம்பரம்பாக்கம் 40மி.மீ, கிண்டி 29 மி.மீ, மீனம்பாக்கம் 28, திருவள்ளூர் 27, பூந்தமல்லி 40, செங்கல்பட்டு 47 மிமீ மழை பதிவானது.
வேலூர் மாவட்டம் அலங்காயத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 151 மி.மீ மழை பதிவானது. அடுத்ததாக திருப்பத்தூரில் 97 மி.மீ, வானியம்பாடியில் 85 மி.மீ, ஆம்பூரில் 81 மி.மீ, நாட்ரம்பள்ளி அக்ரோ 60 மி.மீ.மழை பதிவாகி இருந்தது. ஏலகிரியில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுதவிர கிருஷ்ணகிரியில் 97 மி.மீ, ஓசூரில் 60 மி.மீ, திருச்சுழியில் 85 மி.மீ, திண்டிவனம் 49 மி.மீ, புதுச்சேரியில் 78 மி.மீ, விருதுநகர் திருச்சுழியில் 85 மி.மீ, சாத்தூர் 61 மி.மீ, திருப்புவனம் 90 மி.மீ, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் 40 மி.மீ, தூத்துக்குடி நகரில் 31 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்(படம் உதவி ஃபேஸ்புக்)
இந்த மழை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து இந்து தமிழ்திசை சார்பில்(ஆன்-லைன்) தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் யுஏசி எனப்படும் அப்பர் ஏர் சர்குலேஷன் அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த மழை தொடர்ந்து இன்னும் 2 அல்லது 3 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்பு உண்டு. அதிகபட்சம் 21ம்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 2013-ம்ஆண்டுக்குப்பின் காலையில் மீண்டும் பெய்தது மகிழ்ச்சிக்குரியது. ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் காலை நேரத்தில் நல்ல மழை பெய்தது.
அடுத்துவரும் நாட்களில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய வடமாவட்டங்களில் இரவு நேரத்தில் அல்லது அதிகாலையில் கனமழை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். பகல் நேரத்தில் பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்பில்லை.
தென் மாவட்டங்களில் கூட நேற்று விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியபகுதிகளில் மழை பெய்தது. வரும் நாட்களில் அங்கு மழைகுறைந்துவிடும். அடுத்த 3 நாட்களுக்கு வடமாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை இருக்கும்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT