Published : 17 Aug 2019 05:44 PM
Last Updated : 17 Aug 2019 05:44 PM
மஞ்சூர்
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக அவலாஞ்சி அருகேயுள்ள எமரால்டு, தக்கர் பாபா நகர், லாரன்ஸ் பகுதிகளில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை கனமழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதி தீவிரமாக இருந்தது. அவலாஞ்சியில் 82, 91, 45 செ.மீ. மழை, தொடர்ந்து மூன்று நாட்கள் பதிவானது. இதன் காரணமாக அவலாஞ்சிக்குச் செல்லும் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, அவலாஞ்சி இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.
அவலாஞ்சி மின் நிலையம் அருகே பெரியளவில் ஏற்பட்ட மண் சரிவில் பல மரங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக மின் நிலையம் தப்பியது. அவலாஞ்சி வனப்பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பேரபாயத்தில் மக்கள் தப்பினர். அங்கு பெய்த மழை உதகை நகரில் பெய்திருந்தால், உதகை காணாமல் போயிருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
அவலாஞ்சியில் பெய்த மழையின் தாக்கம் அதைச் சுற்றியுள்ள எமரால்டு, லாரன்ஸ், தக்கர்பாபா நகர், அட்டுபாயில் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இப்பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து தக்கர்பாபா நகர் மக்கள் கூறும் போது, ''அவலாஞ்சி மலை தொடரில் பெய்த மழையால் எமரால்டு, லாரன்ஸ், தக்கர்பாபா நகர் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு காரணமாக குடியிருப்புகள் தற்போது அந்தரத்தில் தொங்குகின்றன. பாதுகாப்பு கருதி எங்களை எமரால்டில் உள்ள பள்ளியில் அதிகாரிகள் தங்க வைத்தனர். இந்நிலையில், மழை குறைந்துவிட்டதாலும், பள்ளிகள் திறந்ததாலும், எங்களை அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். எங்கள் குடியிருப்புகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், வீட்டில் தங்க பயமாக இருக்கிறது.
பாதுகாப்பு கருதி பலர் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில், சிலர் மீண்டும் அபாயகரமான வீடுகளுக்கே திரும்பியுள்ளனர்.
நாங்கள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலை செய்கிறோம். அது தான் எங்களின் ஒரே வாழ்வாதாரம். தோட்டத்திலிருந்து தூரம் சென்று விட்டால், வேலைக்கு வர முடியாது. இதனால், மண் சரிவு ஏற்பட்ட பகுதியிலேயே தங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். மழை குறைந்து விட்டதால், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை அரசு விரைந்து சீரமைத்தால்தான் மக்கள் அச்சமில்லாமல் இருக்க முடியும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT