Published : 17 Aug 2019 05:37 PM
Last Updated : 17 Aug 2019 05:37 PM

வைகையில் இருந்து 29-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை

வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி வரும் 29-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியது. தற்போது தாமதமாக பெய்ய ஆரம்பித்துள்ளதால் பெரியாறு அணைக்கு ஒரளவு நீர் வரத்து உள்ளது. அதனால், பெரியாறு அணைக்கு 1,554 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணை நீர் மட்டம் 131.05 அடியை எட்டியுள்ளது. வைகை அணைக்கு பெரியாறு அணையிருந்து 1,700 கன அடி திறந்துவிடப்படுகிறது. ஆனால், இதில், 1,498 கன அடி மட்டுமே வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மீதி தண்ணீர் திருடப்படுவதாகவும், ஆவியாகுவதாகவும் கூறப்படுகிறது.

வைகை அணை நீர் மட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை நிலவரப்படி 43.67 அடியாக இருந்தது. வைகை அணை நீர் மட்டம் ஒரளவு உயர்ந்துள்ளதால் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி தேனி, மதுரை மாவட்ட பெரியாறு பாசன கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே வேளையில் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு நெல் விவசாயம் அமோகமாக நடந்தது. இருபோக விவசாயம் செழித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது ஒரு போகத்திற்கு கூட இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாமல் பெரியாறு பாசன விவசாய நிலங்கள் வானம் பார்த்தபூமியாக காய்ந்து போய் உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தென்மேற்கு பருவமழை சரியாக பெய்து இருந்தால் ஜூன் மாதம் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டிருப்போம். கடந்த சில வாரத்திற்கு முந்தைய நிலையைப் பார்த்தால் வைகை அணை நீர் மட்டம் கடும் வீழ்ச்சியடைந்து இருந்தது.

மதுரை குடிநீருக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதனாலே, மதுரை மாநகராட்சியில் 2 நாளைக்கு ஒரு முறை இருந்த குடிநீர் விநியோகம் 4 நாளைக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டது.

சில நாளாக பெரியாறு பகுதியில் நல்ல மழை பெய்தது. தற்போது குறைந்துவிட்டது. நேற்று மாலை மீண்டும் திடீரென்று மழை பெய்தது. அதனால், இன்று நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வைகை அணை நீர் மட்டம் உயர்ந்ததால் தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

வரும் 29-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். இதில், மதுரை மாவட்டத்திற்கு 900 கன அடியும், தேனி மாவட்ட விவசாயத்திற்கு 300 கன அடியும் திறக்க உள்ளோம்.

இந்த தண்ணீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் இரு போக சாகுபடி நிலங்களும், தேனி கம்பம் வேலி பகுதியை சேர்ந்த 15 ஆயிரம் ஏக்கர் இரு போக சாகபடி நிலங்களும் பயன்பெறும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x