Last Updated : 17 Aug, 2019 04:12 PM

2  

Published : 17 Aug 2019 04:12 PM
Last Updated : 17 Aug 2019 04:12 PM

தேசியத்தின் பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கிராமத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அருகில், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம்.

தேசியத்தின் பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவைக் கவர்ந்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் அருகேயுள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்துப் பணிகள் மூலமாக கண்மாய்களைத் தூர் வாரும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பூமி பூஜையைத் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், "அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத்தான் முதல்வர் லண்டன் செல்கிறார்.

ஸ்டாலினுக்கு எங்களைக் குறை கூறுவதுதான் வேலை. மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டு வருவதற்காகதான் வெற்றிகரமான பயணங்களை முதல்வர் மேற்கொள்ள உள்ளார்.

நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். பாஜகவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அதிமுகதான். தேசியத்தின் பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவைக் கவர்ந்துள்ளது.

திமுக பிரிவினையைத் தூண்டக்கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியத்தையும் தெய்வீகத்தையும் மதிக்கக் கூடியவர். மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுபவர் என்கிற பட்டியலில் திமுக மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

அமமுகவில் போட்டியிடுவதற்கு வேட்பாளா்கள் இல்லை. அந்தக் கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் எங்களிடம் வந்துவிட்டார்கள். தேர்தல் களத்தில் அதிமுக, திமுகதான் போட்டியிடும். அதில்அதிமுகதான் வெற்றிபெறும்.

கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல. திடீரென வருவார்கள் போய் விடுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x