Published : 16 Aug 2019 03:29 PM
Last Updated : 16 Aug 2019 03:29 PM
உதகை,
கஜா புயல் பாதிப்புக்கே நிதி பெற முடியாத நிலையில், நீலகிரி மாவட்ட வெள்ள சேதங்களுக்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிதி பெறும் தைரியம் இல்லாதவர் முதல்வர் பழனிசாமி என ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை நீலகிரி எம்.பி. ஆ.ராசா மற்றும் கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி ஆய்வு செய்து, சேதங்களைச் சீரமைக்கவும், அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் ஆய்வறிக்கையை இன்று அளித்தனர்.
பின்னர், நீலகிரி எம்பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் மு.க.ஸ்டாலின் இரு நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் பணியாற்ற கிராம நிர்வாக அலுவலர் கூட இல்லை.
வெள்ளம் ஏற்பட்ட 6 நாட்களுக்குப் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவர் ரூ.200 கோடி தேவை என முதல்வரிடம் அறிக்கை வழங்கிய நிலையில், முதல்வர் நிவாரணப் பணிகளுக்கு ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி வரை தேவைப்படும் நிலையில், ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.
வீடுகள் இழப்பு மற்றும் பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில், துணை முதல்வர் எவ்வாறு ரூ.200 கோடி மட்டுமே தேவை என முடிவுக்கு வந்தார். இது கோமாளித்தனமான அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. பிற மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர்கள் களத்தில் இருந்தனர். ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி பேரிடர் ஏற்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு வராமல், மேட்டூர் அணையைத் திறக்கs சென்றார். அங்கு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தும், எதிர்க்கட்சி தலைவரைக் கொச்சைப்படுத்தியும் பேசினார்.
நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.500 கோடி தேவை. ஆனால், முதல்வர் ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார். இது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போல. கஜா புயலுக்கே நிவாரணத் தொகையை மத்திய அரசிடமிருந்து அழுத்தம் கொடுத்துப் பெற முடியாத முதல்வர் பழனிசாமிக்கு, நீலகிரி வெள்ள தேசங்களுக்கு நிதி கேட்க தைரியம் வருமா?
திமுக, அரசு அதிகாரத்தில் இல்லாத நிலையில் ரூ.10 கோடி நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும் என தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அரசு அதிகாரத்தில் உள்ள அதிமுகவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’.
இவ்வாறு நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment