Published : 16 Aug 2019 03:14 PM
Last Updated : 16 Aug 2019 03:14 PM
எலும்பு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு எலும்பு நோயால் பாதிக்கப்படும் ஏழை நோயாளிகளும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு பெறுவதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் 'எலும்பு வங்கி'யும் விரைவில் தொடங்கப்படுகிறது.
இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்த வங்கியைப் போல் இந்த எலும்பு வங்கியும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எலும்பு புற்றுநோயால் இறப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 5 ஆண்டிற்கு முன் 7 லட்சமாக இருந்த உள் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்து 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு தினமும் 30 புதிய புற்றுநோயாளிகளும், 70 பழைய புற்றுநோயாளிகளும் சிகிச்சைப்பெறுகின்றனர். இதில், எலும்பு புற்றுநோயாளிகள் அதிகம் வருகின்றனர்.
தற்போது புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் மருத்துவம் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இதில், கதிரியக்க சிகிச்சை, புற்றுநாய் மருத்துவ சிகிச்சையில் புற்றுநோய் எந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு புற்றுநோய் செல்களை அழித்து இந்த நோயை குணப்படுத்தலாம்.
ஆனால், எலும்பு புற்றுநோயை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு பொருத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நோயாளிகள் இயல்பாக நடக்க முடியாதநிலை ஏற்படும். எலும்பு புற்றுநோய்க்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ‘எலும்பு வங்கி’ அவசியம்.
தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. தற்போது அதுபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் ‘எலும்பு வங்கி’ விரைவில் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான திட்டம் தயார் செய்து, தமிழக சுகாதாரத்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தால் உயிருக்கு போராடும் ஒருவருக்கு ரத்தவங்கி எப்படி உயிரை காப்பாற்ற உதவுகிறதோ அதுபோல், எலும்பு வங்கியும் மறு வாழ்வை தருகிறது.
எலும்பு புற்றுநோய் காரணமாகவும், விபத்தால் எலும்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இது வரை, மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்டீல் கொண்டு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எலும்பு வங்கி ஏற்பட்டால் எலும்பு மாற்றாக மூளை சாவு அடைந்தவர்களுடைய எலும்புகளை எடுத்து வைக்கலாம்.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எலும்பு அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "எலும்பு வங்கி என்பது கிருமித்தொற்று, புற்றுநோய் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு அதற்கு மாற்றாக உண்மையான எலும்பைப் பொருத்துவதற்கு உதவியாக இருக்கும்.
மூளை சாவடைந்தவர்கள்,எலும்பு தானம் கொடுப்பவர்களிடம் சேகரிக்கப்படும் எலும்புகள் வேதிப்பொருட்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு இந்த ரத்த வங்கியில் பாதுகாக்கப்படும். எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படும் நேரத்தில், ரத்த வங்கியில் பாதுகாக்கப்படும் எலும்புகள் எடுத்துக் கொடுக்கப்படும்.
1988 ஆண்டில் இந்தியாவின் முதல் எலும்பு வங்கி மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல், மதுரையிலும் எலும்பு வங்கி தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT