Published : 16 Aug 2019 12:40 PM
Last Updated : 16 Aug 2019 12:40 PM
உயிர்காக்கும் உத்தம பணியில் ஈடுபட்ட திண்டுக்கல் இளைஞர் ஆனந்தகுமாருக்கு தமிழக முதலமைச்சர் இளையோருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே கொட்டபட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கு நேற்று(ஆக.15) சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் இளையோருக்கான விருதை வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து ஆனந்தகுமார்(34) இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில், "உயிர் காக்க உதவும் ரத்ததானம் இதுவரை 30 முறை செய்துள்ளேன்.
தமிழகம், புதுச்சேரியில் ரத்தான குழுக்களுடன் இணைந்து ரத்ததானம் செய்துவருகிறேன். இதற்காக பாரத மாதா பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன்.
நான் உயிர்காக்க உதவும் இந்த செயலில் இறங்க எனக்கு வழிகாட்டியது எனது தாயார்தான். ஒரு முறை எனது தாயாரை திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு அழைத்துச்சென்றபோது, ஒரு பெண் கண்ணீருடன் மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார். எதற்கு அழுகிறீர்கள் என எனது தாயார் கேட்டபோது, மகளை பிரசவத்திற்கு அனுமதித்துள்ளேன். ரத்தம் போதவில்லை என்கின்றனர் என்பதால் பயமாக உள்ளது, என்றார்.
உடனே என்னை அழைத்துச்செல்ல கூறினார் எனது தாயார். பிரசவத்திற்கு அனுமதித்த பெண்ணின் ரத்த வகையே எனது ரத்தமும் என்பதால் அன்றுதான் முதன்முதலில் ரத்ததானம் செய்தேன். அன்று ஒரு உயிர் அல்ல, இரண்டு உயிர்களை காப்பாற்றிய திருப்தியை எனது தாயாரிடம் கண்டேன். அன்று முதல் இன்றுவரை உயிர்காக்க உதவும் ரத்ததானம் செய்துவருகிறேன்.
இதற்காக பாரதமாதா பவுண்டேஷன் என்ற பெயரில் குழுக்கள் அமைத்து மாவட்ட வாரியாக உள்ள ரத்ததான குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தமிழகம், புதுச்சேரியில் இந்த சேவையை செய்துவருகிறோம். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களுக்கு மேல் காப்பாற்றியுள்ளோம்.
திண்டுக்கல்லில் 62 தாலசீமியா நோயால் (ரத்த உற்பத்தி குறைபாடு) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரத்ததானம் செய்துவருகிறோம்.
இவர்களுக்கு ஒரு மாதம் ரத்தம் கொடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே ரத்ததானம் செய்கிறோம். உயிர்காக்கும் சேவைக்கு முதன்முறையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொடுத்துள்ள விருது ரத்ததானம் வழங்கும் குழுக்களை சேர்ந்த அனைவருக்கும் சேரும்.
நேரம் காலம் பார்க்காமல் உயிரை காப்பாற்ற ரத்தம் கொடுத்த அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம்.
இந்த சேவையை 10 ஆண்டுகளாக செய்துவருகிறேன். எனது தாயார் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரத்தானம் செய்யும்போதும் நான் முதன்முதலில் ரத்ததானம் செய்தபோது எனது தாயார் முகத்தில் பார்த்த சந்தோஷத்தை ஒவ்வொரு முறையும் காண்கிறேன், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT