Published : 15 Aug 2019 08:13 PM
Last Updated : 15 Aug 2019 08:13 PM
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பூங்கா அமைத்ததற்காக சென்னை மாநகராட்சிக்கு முதல்வர் நல் ஆளுமை விருது அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மேலும் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
நல் ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ் என்பது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருது ஆகும். சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட இந்த விருதினை முதல்வரிடமிருந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.
சென்னை சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் உள்ள 4-வது ட்ரஸ்ட் லிங்க் சாலையில் இன்பினிட்டி பூங்கா அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இந்தப் பிரத்யேகப் பூங்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. தமிழகத்திலேயே சிறப்புக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதல் பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பூங்காவை அமைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விருது கிடைத்தது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.
அப்போது அவர் கூறியதாவது:
''மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பூங்கா அமைத்ததற்கு சென்னை மாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வு. சென்னையில் முதன்முதலாக இப்படிப்பட்ட பூங்கா அமைக்கப்பட்டதற்குக் கிடைத்த விருது அது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பூங்கா அமைப்பது அவசியமான ஒன்று.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு இருக்க வேண்டும். சென்னையில் 33 பூங்காக்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். அதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 4 பூங்காக்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்துள்ளன.
திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் முடிந்து அடுத்த மே மாதத்தில் திறக்கப்படலாம். இது மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்துள்ள பெற்றோருக்கு மிகுந்த பயன்தரும் ஒன்றாக அமையும்.
இப்படி அமைக்கப்படும் பூங்காக்களையும் சென்னையின் மையத்தில் முக்கிய இடத்தில் அமையும்படி திட்டமிட்டுள்ளோம்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT