Published : 15 Aug 2019 07:09 PM
Last Updated : 15 Aug 2019 07:09 PM
சென்னை,
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சென்னை சாந்தோமில் இன்பினிட்டி பூங்கா அமைத்ததற்காக, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு (பூங்காத்துறை) நல் ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ் சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டது.
நல் ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ் என்பது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருது ஆகும். இந்த விருதினை முதல்வரிடமிருந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.
சென்னை சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் உள்ள 4-வது ட்ரஸ்ட் லிங்க் சாலையில் இன்பினிட்டி பூங்கா அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இந்தப் பிரத்யேகப் பூங்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. தமிழகத்திலேயே சிறப்புக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதல் பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் 1,529 சதுர மீட்டர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூங்காக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பூங்கா இது ஒன்றுதான் என்பது கவனிக்கத்தக்கது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கை வண்ணத்திலான சுவர் ஓவியங்கள். பார்வைக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்காக தொடு உணர்வு பலகைகள், நடைப்பயிற்சி தளம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.
மண், கூழாங்கற்கள், மரம், நார், கான்கிரீட் போன்ற பொருட்கள் நடைபாதை அமைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வைக் குறைபாடு, ஆட்டிசம், மற்றும் சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தைகளுக்காக ராட்டினம் தரைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் விளையாடுவோர் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில் ரப்பர் தரை அமைக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவு குறைபாடு (ADHD) உள்ள குழந்தைகளுக்கு உகந்த வகையில் சறுக்குமரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு கவனிப்பில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் இப்பூங்கா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு சாரா நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சியும் இணைந்து இந்தப் பூங்காவை உருவாக்கினர்.
பூங்காவை உருவாக்கியவர்களில் ஒருவரான மாநகராட்சி ஒப்பந்ததாரரான விவேக் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் என்.விவேக்கிடம் இதுகுறித்துக் கேட்டோம்.
''இன்பினிட்டி பூங்காவுக்காக நல் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அரசின் மக்கள் நலத்திட்டத்தில் ஓர் அங்கமாக இதை உருவாக்கும் வாய்ப்பை அளித்ததற்கு சென்னை மாநகராட்சிக்கு நன்றி சொல்லவேண்டும். இந்தத் திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்ச ரூபாய் மதிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியால் உருவாக்கப்பட்டது. 1,529 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா கட்டப்பட்டது.
பூங்காவை உருவாக்கும்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், தொண்டு நிறுவனமும் முதல் நாளிலேயே என் மனதில் ஆழமாக ஒரு விஷயத்தைப் பதிவு செய்துவிட்டார்கள். இது மற்ற ப்ராஜக்ட் போல் அல்ல. மிகுந்த ஈடுபாட்டுடன் ஆத்மார்த்தமாக செய்யவேண்டும். இது ஒருவகையான சேவை போன்றது. தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிவிட்டனர். அது என் மனதில் ஆழமாகப் பதிந்தது.
ஆறு மாதங்கள் பார்த்துப் பார்த்து சிறிய சிறிய விஷயங்களைக்கூட நுணுக்கமாகச் செய்தோம். இந்தத் திட்டத்தை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்கிற பயத்துடன் செய்த பணி அது. அது நல்லபடியாக முடிந்து இன்று முதல்வரால் விருதும் கிடைத்துள்ளது. அதில் பங்கேற்றவர்களில் ஒருவன் என்கிற முறையில் மிகுந்த திருப்தியாக உள்ளது'' என்றார் விவேக்.
பூங்காவின் பயன் குறித்து சிறப்பு கவனிப்பில் உள்ள குழந்தையின் தந்தை ஒருவரிடம் பேசினோம்.
இன்பினிட்டி பூங்கா குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்காக்கள் உலகம் முழுவதும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இந்தப் பூங்கா ஒன்றுதான் உள்ளது. பெங்களூருவில் 3 பூங்காக்கள் உள்ளன.
இது வரவேற்கப்படக்கூடிய பூங்கா. மாற்றுத்திறனாளி குழந்தைகள் சக்கர நாற்காலியுடன் விளையாடலாம். கீழே விழுந்தால் அடிபடாத வகையில் ரப்பர் தரை உள்ளது. சிறப்பு கவனிப்பில் உள்ள குழந்தைகள் விளையாடும்போதே அவர்கள் மன வலிமைக்கான பயிற்சிகளுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு, அழகான பூங்காவை வடிவமைத்துள்ளனர். இதுபோன்ற பூங்காக்களை சென்னையில் அதிகம் அமைக்க வேண்டும்.
வேறு ஏதும் பூங்காவில் பிரச்சினை உள்ளதா?
இது முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பூங்காவாக இருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. காலையில் மட்டும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்காக பூங்கா திறக்கப்படுகிறது.
மாலையில் மற்ற குழந்தைகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுடன் மாற்றுத்திறனாளி குழந்தைகள் போட்டியிட்டு விளையாட முடியாது. அதேபோன்று ஆட்டிசம் பாதிப்பில் உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாட அஞ்சும். இதை சென்னை மாநகராட்சி கருத்தில் கொள்ளவேண்டும். முதல்வரின் கவனம் பெற்று விருது பெற்றுத்தந்த இன்பினிட்டி பூங்காக்கள் மேலும் அமைக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் வேலைகள் நடக்கின்றன. சென்னையில் சில இடங்களில் மேலும் இதுபோன்ற பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT