Last Updated : 15 Aug, 2019 03:30 PM

1  

Published : 15 Aug 2019 03:30 PM
Last Updated : 15 Aug 2019 03:30 PM

விநோத தண்டனை அளித்த நீதிமன்றம்: காமராசர் இல்லத்தை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

காமராசர் இல்லத்தை தூய்மைப்படுத்தும் மாணவர்கள்

விருதுநகர்

நீதிமன்ற உத்தரவின்படி, கல்லூரி மாணவர்கள் விருதுநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 8 பேர் மது போதையில் வகுப்புக்கும், கணினி ஆய்வகத்துக்கும் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 8 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் 3-ம் ஆண்டில் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து தங்களிடம் கல்விக் கட்டணத்தை வாங்கிக்கொண்டு 3-ம் ஆண்டில் வகுப்பில் அனுமதிக்கக் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி 8 மாணவர்களும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், "மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதேநேரத்தில் 3-ம் ஆண்டிலிருந்து மனுதாரர்களை வெளியே அனுப்பினால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதனால் மனுதாரர்கள் சுதந்திர தினம், ஆக. 15-ல் விருதுநகரில் காமராசர் பிறந்த இடத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். காமராசர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். மாலை 4 முதல் 6 மணி வரை தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுபடி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதை உதவிப் பேராசிரியர் ஒருவரை நியமித்து கல்லூரி முதல்வர் கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் மனுதாரர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு 3-ம் ஆண்டு வகுப்பில் கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுன் காவல் ஆய்வாளரும் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறினால் மனுதாரர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவைச் செயல்படுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆக.19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"
என்று உத்தரவிட்டார்.

அதன்படி, மாணவர்கள் 8 பேரும் சுதந்திர தினமான இன்று (ஆக.15) காலை சுமார் 10 மணிக்கு விருதுநகரில் உள்ள காமராசர் இல்லத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். காமராசர் இல்லத்தைக் காணவந்த பார்வையாளர்களுக்கு, மாணவர்கள் அவரது சிறப்புகள் குறித்தும் வழங்கினர். மாணவர்களைக் கண்காணிக்க உதவிப் பேராசிரியர் ஒருவரும் கல்லூரி சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார். அதோடு காமராசர் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x