Published : 15 Aug 2019 02:59 PM
Last Updated : 15 Aug 2019 02:59 PM
சென்னை
சாதியைக் குறிக்கும் வண்ணக்கயிறுகளை அணியும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்ட சுற்றறிக்கை குறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை அடையாளம் கண்டு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு தினங்களுக்கு முன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததாக செய்தி வெளியானது.
அதில், சாதியப் பாகுபாடுகளைக் காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும், அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றிருந்தனர். ஆனால், தேசிய பாஜக செயலாளர் ஹெச்.ராஜா, "திலகமிடுவதும், கைகளில் கயிறு கட்டுவதும் இந்துமத நம்பிக்கை தான், ஆகையால் இதுதொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்," என வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த உத்தரவு குறித்து தங்கள் கவனத்திற்கு வரவில்லை என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஆக.15) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
" பள்ளிகளில் சாதி அடிப்படையிலோ, மதங்கள் அடிப்படையிலோ, மாணவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் செயல்பட்டால், அதனை சரிபார்க்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியது.
அதனை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வரவில்லை.ஆகவே, தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.
அந்த அரசாணை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை", என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT