Published : 25 Jul 2015 01:56 PM
Last Updated : 25 Jul 2015 01:56 PM

குலோத்துங்க சோழர் காலக் கல்வெட்டுகள்: முசிறி அருகே அலகரை கோயிலில் கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அலகரையில் உள்ள கோயிலில் குலோத்துங்கச் சோழர் காலக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழர் காலத்தில் நாட்டுப் பிரிவு ஒன்றின் தலைமை ஊராக இருந்த, இன்று திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் சாலையில் மணமேட்டிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலகரை என்னும் சிற்றூரில் ஒதுக்குப்புறத்தில் சிதைந்த நிலையில் காணப்படும் சோமீசுவரர் கோயில் நிறைவடையாத கோபுரத்துடன் ஒருதளத் திராவிட விமானமாக முன்புறம் மண்டபங்கள் பெற்று அமைந்துள்ளது.

வளாகச் சுற்றில் மண்டியிருக்கும் புதர்களிடையே சூரியன், எழுவர் அன்னையர் உள்ளிட்ட சிதைந்த இறைத்திருமேனிகள் பலவற்றைக் காண முடிகிறது. இந்த கோயிலில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு.நளினியின் வழிகாட்டலின்பேரில் ஆய்வு மேற்கொண்ட முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் அர.அகிலா, 4 புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்தார்.

இதனை மேலாய்வு செய்த டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன், இந்த கல்வெட்டுகளுள் 2 மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தவை என்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ராஜராஜ சோழன் வளநாட்டு மீமலையான ஜெயங்கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகையாக (பேரூருக்குள் அடங்கிய சிற்றூர்) விளங்கிய அலகரை குலோத்துங்கச் சோழநல்லூர் என்று அக்காலத்தே அழைக்கப்பட்டுள்ளது.

பாண்டிகுலாசநி வளநாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறையில் (லால்குடி) பாடிகாவல் பொறுப்பில் இருந்த சேமன் தாயிலும் நல்லானான குலதீப நாடாள்வான், செந்நிவாழ்க்கை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்களும் இந்த பகுதியிலிருந்து ஆட்சி செய்ததை ஸ்ரீரங்கம் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

இந்தநாடாள்வான் சோமீசுவரர் கோயிலை அலகரையில் எழுப்பியதுடன், கோயிலுக்கான முற்றம், மடைவிளாகம், நந்தவனங்கள் அமைக்கச் சதுர்வேதிமங்கலத்து சபையாரிடமிருந்து ஏறத்தாழ 7,400 குழி நிலத்தை 660 அன்றாடு நற்காசுகளுக்கு விலைக்குப் பெற்றார். கோயில் ஊழியர்கள் தங்குவதற்கு மடைவிளாக நிலத்தில் மனைகள் திட்டமிடப்பட்டன.

அதே சபையாரிடம் மேலும் இருபது மா அளவு நன்செய் நிலத்தை 2060 காசுக்கு விலைக்குப் பெற்ற சேமன் அதை இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்கு அளித்தார். இரண்டு நில விற்பனைகளை விரித்துரைக்கும் இந்த கல்வெட்டு அலகரை நிலங்களுக்கு நீர் கொண்டு சென்ற திருச்சிற்றம்பல வாய்க்கால், வளவன் வாய்க்கால், ஜெயங்கொண்ட சோழ வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசன அமைப்புகளின் பெயர்களையும், நீர் வடிகால்களின் பெயர்களையும் வெளிப்படுத்துவதுடன், அந்த ஊர் நிலங்களின் விளைதிறன், பருவப் பயிர் முறை ஆகிய வேளாண்மை செய்திகளையும் தருவது குறிப்பிடத்தக்கது.

கோயில் கோபுரத்தின் தென், வட சுவர்களில் பரவியிருக்கும் 3-ம் குலோத்துங்கரின் 13-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தென்சுவரில் மட்டும் படிக்கப்பட்ட நிலையில் பதிவாகியுள்ளது.

தற்போது முழுமையும் படிக்கப்பட்ட நிலையில் கோயில் எடுப்பித்த அதே குலதீப நாடாள்வான், கோயில் பணியாளர்களுக்கான ஊதியத்துக்காக அலகரையிலும் ராஜேந்திர சோழநல்லூரிலும் மாணிக்க நல்லூரிலும் விலைக்குப் பெற்ற ஏழரை வேலி நிலத்தை இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்கு அளித்தது தெரியவருகிறது. வேலி ஒன்றுக்கு 50 கலம் நெல் இறையாகத் தரப்பட்டதும், நிலங்கள் அவ்வப்போது தரம் நிர்ணயிக்கப்பட்டு அரசின் வருவாய்த் துறையால் வரியிடப்பட்டதும் இந்த கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை முழுமை பெறாமல் உள்ளன.

நந்தி மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டு பெரிதும் சிதைந்திருப்பினும் தனியார் ஒருவர் கோயிலுக்கு அளித்த கொடை பற்றிய தகவலைப் பெற முடிகிறது. கோபுரத்தின் வடசுவரில் இடம்பெற்றுள்ள 12 வரித் தெலுங்குக் கல்வெட்டைப் படிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் கலைக்கோவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x