Published : 13 Aug 2019 02:44 PM
Last Updated : 13 Aug 2019 02:44 PM

சரித்திர விபத்தால் முதல்வரான எடப்பாடி இப்படி பேசலாமா?- கார்த்தி சிதம்பரம் பதிலடி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை விமர்சித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம்.

முன்னதாக, தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று ப.சிதம்பரம் பேசியிருந்தார்.

இது தொடர்பாக இன்று மேட்டூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர், "ப.சிதம்பரம் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன். அவர் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம்,"முதலில் ஒரு முதல்வர் சொல்ல வேண்டிய வாசகமா இது? அவரைப் பற்றி நான் ஒரு வீடியோ பார்த்தேன். அதைப் பற்றியெல்லாம் நான் இங்கு பேச விரும்பவில்லை. ஒரு சரித்திர விபத்தால் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்டவர் இப்படிப் பேசுகிறார். இந்தியாவின் நிதியமைச்சராக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவரை, ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று விருது வாங்கியவரை இப்படிப் பேசலாமா? எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிடுவார் என்று எனக்குத் தெரியும். நாளை காலை சாமி கும்பிடும்போது அவரே இதைப் பற்றி சிந்திக்கட்டும். அவருக்கு மனசாட்சி உறுத்துகிறதா இல்லையா என்று பார்ப்போம்" என்றார்.

மாநில உரிமைக்கு அபாயம்..

காஷ்மீர் பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், "தனிநபர் உரிமை, மாநில உரிமைக்கு மத்திய அரசாங்கத்தால் பெரிய அபாயம் இருக்கிறது.

இந்தியாவில் பல யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவையெல்லாம் மாநில அந்தஸ்து கோருகின்றன. ஆனால், இந்திய சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கியுள்ளனர். மூன்றாவது நிலை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளனர். இதில் காஷ்மீர் மக்கள் அபிப்ராயத்தை கேட்கவில்லை. சூழ்ச்சி செய்து சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அங்கு 500-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கைதாகியுள்ளனர்.

8 நாட்களாகிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்களிடமிருந்து ஓர் அறிக்கைகூட இல்லை. ஆனால் இதையெல்லாம் கேட்க இங்கே எந்த கட்சிக்கும் தைரியம் இல்லை.

காஷ்மீர் பிரச்சினையில் துணிவான எதிர்க்கட்சி காங்கிரஸ்; தெளிவான கூட்டணி திமுக. மற்ற கட்சிகள் எல்லாம் அங்குமிங்கும் தள்ளாடுகின்றன.

யோசித்துப் பாருங்கள் தமிழகத்தில் தீபாவளிக்கு முன்னால் தொலைபேசி, இணைய சேவையை துண்டித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, தலைவர்களை கைது செய்துவிட்டு பண்டிகையை கொண்டாடச் சொன்னால் எப்படியிருக்கும். அப்படியான நெருக்கடியைத் தான் காஷ்மீருக்கு அரசாங்கம் ஏற்படுத்தியது.

இது சர்வாதிகார போக்கு. மத்திய அரசு தனிநபர் உரிமைக்கும் மாநில உரிமைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது. காஷ்மீரில் நடப்பது நாளை மற்ற மாநிலங்களுக்கு நடக்கலாம்" என்றார்.

ரஜினிகாந்த் சரித்திரத்தையும் படிக்க வேண்டும்..

ரஜினிகாந்த் எனது நண்பர். காஷ்மீரின் சரித்திரத்தை புரிந்துகொள்ளாமல், அங்குள்ள மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் அவர் பேசியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ரஜினிகாந்த விரைவில் கட்சி தொடங்குவதாகக் கூறியுள்ளார்.

அவர் காஷ்மீர் பிரச்சினையில் மட்டும் கருத்து சொல்லாமல், காவிரி பிரச்சினை, நீட் பிரச்சினை, நெக்ஸ்ட் பிரச்சினை, முத்தலாக் பிரச்சினை, என்.ஐ.ஏ., முல்லைப் பெரியாறு பிரச்சினை என தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் கருத்து சொல்லவேண்டும். புராணத்தை படித்து அர்ஜூனன், கிருஷ்ணர் என அவர் கூறியிருக்கிறார். முதலில் அவர் சரித்திரத்த படிக்கவேண்டும். அதுவும் காஷ்மீர் சரித்திரத்தை படிக்கவேண்டும். இதற்கும் மேலாக ஜெர்மன் நாட்டு சரித்திரத்தை படிக்கவேண்டும்.

ஜெர்மன் வார்த்தை ஒன்று இருக்கிறது. lebensraum என்ற அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனபாருங்கள். (இந்த வார்த்தைக்கு தமிழ் அர்த்தம்: தன் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் நிலப்பரப்பு) காஷ்மீரில் நடப்பது இதற்கு பொருந்தும். ரஜினிகாந்த கூகுள் பண்ணி இந்த வார்த்தையை பார்க்கவேண்டும். இவற்றை படித்துவிட்டு அவர் கருத்து சொல்லவேண்டும். வெறும் புராண ரீதியாக
கருத்து சொல்வதை விட்டுவிட்டு சரித்திரத்தையும் படிக்கவேண்டும்.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x