Published : 27 Jul 2015 05:34 PM
Last Updated : 27 Jul 2015 05:34 PM

தமிழக காய்கறிகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை பரிசோதனை: கேரளத்தின் அச்சத்தைப் போக்க புதிய ஏற்பாடு

கேரளாவின் அச்சத்தைப் போக்கும் வகையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலம் சோதனை செய்து உரிமம் (லைசன்ஸ்) பெற்ற காய்கறிகளை மட்டும் அந்த மாநிலத்துக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரள மாநிலம் மலைச்சரிவு பிரதேசம் என்பதால் அங்கு காய்கறிகள் விளைவதற்கு உகந்த காலநிலை, மண் வளம் இல்லை. அதனால், அம்மாநில மக்களுக்கு காய்கறிகள் தமிழகத்தில் இருந்து குறிப்பாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து, தினமும், 25 முதல் 30 லாரிகள் மூலம் சுமார் 800 டன் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந் நிலையில், தமிழக காய்கறிகளில் அதிகமாக நச்சு, வேதிப்பொருள் இருப் பதாக கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த மாநில சோதனைச் சாவடிகளில் தமிழகத்தில் இருந்து காய் கறிகளை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கேரள வியாபாரிகள் தமிழக காய்கறிகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

அதனால், ஒட்டன்சத்திரம் உட்பட தமிழக காய்கறி சந்தைகளில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புவது 75 சதவீதம் குறைந்தது. இதையடுத்து தமிழக வியாபாரிகள், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மூலம் தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இல்லை என்பதை தொடர்ச்சியான பரிசோதனை மூலம் உறுதி செய்து, முறையான உரிமம் (லைசென்ஸ்) பெறும் வியாபாரிகள் மூலமே, கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்ப தமிழக அரசு புதிய ஏற்பாடு செய்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி சாம் இளங்கோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தாவரங்களை பொருத்தவரை இயற்கையாகவே தேவையில்லாத நச்சுப் பொருட்களை ஏற்காது. நஞ்சை உறிஞ்சினால் வளர்ச்சி பெறாது. அதனால், தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் நச்சு வேதிப்பொருள் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், கேரளத்தின் அச்சத்தைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் தமிழக காய்கறிகளை முறையான ஆய்வு, உரிமம் பெற்று அனுப்ப கேரள அரசு, தமிழகத்துக்கு கெடு விதித்துள்ளது. கேரளாவுக்கு வெளிமாநில காய்கறிகள் வரத் தொடங்கிவிட்டால் தமிழக காய்கறி வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்படும். அதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, முறையான உரிமத்துடன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளத்துக்கு காய்கறிகளை அனுப்பும் தமிழக வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு மட்டும் காய்கறிகளை கேரளாவுக்கு அனுப்ப சான்று வழங்கப்படும்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 300 வியாபாரிகளுக்கு இன்று முதல் உரிமம் வழங்கப்படுகிறது. அவர்கள் ஆக.1 முதல் புதிய முறைப்படி காய்கறிகளை அனுப் புவார்கள். இந்த உரிமம் பெற்றவர்களுக்கு கேரள சோதனைச்சாவடிகளில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தொடர்ச்சியாக, தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் காய்கறிகளை சோதனையிட்டு, அந்த அறிக்கை கேரள அரசுக்கும் அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x