Published : 12 Aug 2019 08:08 PM
Last Updated : 12 Aug 2019 08:08 PM
காஷ்மீர் போன்ற ஒருசில விஷயங்களில் மட்டும் கருத்து தெரிவிக்காமல், தமிழகத்தை பாதிக்கும் நீட் போன்ற அனைத்து விஷயங்களிலும் ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை ரஜினி வரவேற்றது வருத்தமளிக்கிறது. அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் அவர் காஷ்மீர் போன்ற ஒருசில விஷயங்களில் மட்டும் கருத்து தெரிவிக்காமல், மருத்துவ ஆணையம், நெக்ஸ்ட் தேர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலங்கை பிரச்சினை, தமிழகத்தை பாதிக்கும் நீட் போன்ற அனைத்து விஷயங்களிலும் கருத்து தெரிவிக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. முரட்டு பெரும்பான்மை இருப்பதால் எந்தவொரு சட்டத்தையும் யாரையும் சட்டை செய்யாமல் பாஜக நிறைவேற்றி வருகிறது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் நாடாளுமன்ற குழுவை அமைக்காமல், அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றுகிறது. பாஜக அரசு 'காக்காவின் நிறம் வெள்ளை' என்று சட்டம் கொண்டுவந்தாலும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிடும்.
தகவல் உரிமை சட்டத்தை மாற்றியதால், இனி மத்திய அரசுக்கு சங்கடமான கேள்விகள் கேட்டால் பதில் வராது. இது ஜனநாயகத்திற்கு பெரும் பின்னடைவு. மருத்துவத்துறையில் முன்னோடி மாநிலம் தமிழகம். ஆனால் மருத்துவ ஆணையத்தில் தமிழகத்திற்கு 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
மாநில உரிமைகள் உட்பட தனிநபர் உரிமைகளை ஏறி மிதிக்கின்ற அரசாங்கமாக பாஜக உள்ளது. முதல்முறையாக ஒரு மாநிலத்தை மூன்றாம் ரக யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளனர். காஷ்மீரில் நடப்பது அரசியல் அநாகரீகம், ஜனநாயகத்திற்கு எதிர்மறையான செயல்பாடு. அனைத்து வகையிலும் தமிழக உரிமை பறிக்கப்படுகிறது. அதற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT