Published : 12 Aug 2019 05:45 PM
Last Updated : 12 Aug 2019 05:45 PM

மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்: நீலகிரியில் ஆய்வு செய்த பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு பேட்டி

கூடலூர்


நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிபிஎம் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.

கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், சி.பத்மநாபன், ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, கே.ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், லீலா வாசு மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட செயலாளர் அடையாள குட்டன் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்தனர்

மழை வெள்ளத்தால் வீடுகளிலிருந்து நடுவட்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திரா நகர் பகுதி மற்றும் அனுமாபுரம், நடுவட்டம் பகுதியில் மழையினால் வீடுகள் இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், கூடலூர் பகுதியில் அத்திப்பாளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புறமணவயல் பழங்குடி மக்கள், காடம் புழா கொக்கோ கார்டு பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மக்களிடம் உறுதியளித்தனர்.

பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உடனடியாக வீடுகள் கட்டித் தரவேண்டும். விவசாயப் பயிர்களை இழந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மாற்று இடம் வழங்க வேண்டும். மழையினால் வேலை இழந்த கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லா கால நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்.

கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதியில் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நில பட்டா வழங்க தடை செய்யப்பட்டுள்ள அரசாணை 1168-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் வெள்ள நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட குழுவின் சார்பிலும் இதர மாவட்டங்களிலும் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. சேகரிக்கப்பட்ட பொருட்களை ஓரிரு நாட்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேரடியாக சென்று வழங்குவது என சிபிஐஎம் நீலகிரி மாவட்டக் குழு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x