Last Updated : 12 Aug, 2019 02:44 PM

 

Published : 12 Aug 2019 02:44 PM
Last Updated : 12 Aug 2019 02:44 PM

மூணாறு பெரியவாரை பாலம் தற்காலிகமாக சீரமைப்பு: உடுமலை வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்- மக்கள் ஆறுதல்

மழையால் சேதமடைந்த மூணாறு பெரியவாரை பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உடுமலை வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.

மூணாறில் நயமக்காடு, கன்னிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் நீர் பெரியவாரை வழியே ஹெட்வொர்க்ஸ் அணைக்குச் செல்கிறது. பெரியவாரையில் நீரோட்டம் அதிகம் இருப்பதால் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் மழையினால் இந்தப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ராட்சத சிமென்ட் குழாய்கள் அமைத்து தற்காலிகமாக போக்குவரத்துக்குப் பாதை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர்மழையினால் இந்த தற்காலிக பாலமும் சேதமானது. இதனால் உடுமலைப்பேட்டை வழித்தட போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மூணாறில் தற்போது மழை மற்றும் நீர்வரத்து வெகுவாய் குறைந்துள்ளது.

இந்நிலையில், கனமழையால் பாதித்த பெரியவாரை பாலம் லகுரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளன. கரையின் எதிர்புறத்தில் இருந்து உடுமலைப்பேட்டை பேருந்துகள் வழித்தட போக்குவரத்து துவங்கியுள்ளது.

எனவே இப்பாலத்தை சீரமைக்கும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. தற்போது லகுரகவாகனங்கள் செல்லும் அளவிற்கு சிறு பகுதி சரி செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவை சென்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் தமிழக அரசுப் பேருந்து போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. கரையின் எதிர்புறம் நிறுத்தப்பட்டுள்ள பேருந்திற்கு பொதுமக்கள் நடந்து சென்று ஏறிக் கொள்கின்றனர்.

மூணாறில் இருந்து 3 கிமீ.தூரத்தில் அமைந்துள்ள இப்பகுதிக்கு ஜீப், ஆட்டோவில் வந்து பின்பு பேருந்தில் பயணிக்கும் அளவிற்கு நிலை சற்று சீராகியுள்ளது. இதனால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து இப்பாலத்தை முழுமையாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x