Published : 12 Aug 2019 01:32 PM
Last Updated : 12 Aug 2019 01:32 PM

நீலகிரி வெள்ள சேதம்: திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிவாரண நிதி; ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி

நீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கடந்த இரு நாட்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அவர் இன்று (திங்கள்கிழமை) மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஸ்டாலின், தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

இதையடுத்து ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கூடலூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான மழைநீர் வழித்தடங்களைச் சரிசெய்து திமுக ஆட்சி நடவடிக்கை எடுத்தது. இதுபோன்ற நடவடிக்கையை அதிமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். கிராமப்புற சாலையோரங்களில், நீர் ஓடுவதற்கான பாதைகளில் சிமெண்ட் தளங்கள் அமைத்திட வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு அவர்கள் வீடுகளில் இருக்கின்ற மழைநீர் முழுவதுமாக வடிகின்ற வரையில், முகாம்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அரசு வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்காது. இனிமேலும் இவ்வாறு மெத்தனமாக இருக்காமல், பணிகளை முடுக்கிவிட வேண்டும். திமுக இங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறது. ஆனால், ஆளும் அரசு பெயருக்கு ஓரிரு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கிறது. அந்த அமைச்சர்களும், பப்ளிசிட்டிக்காக வந்துவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆராயாமல், மக்களைச் சந்திக்காமல் சென்றிருக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது.

நீலகிரியில் கனமழையால் சுமார் 350 கி.மீ.க்கு சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. 150 கி.மீ. நான் பயணம் செய்திருக்கிறேன். ஏறக்குறைய 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய தாலுகாக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இத்தொகுதியின் எம்.பி. ஆ.ராசாவுக்கு இருக்கக்கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாயை ஒதுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். கூடலூர் எம்எல்ஏ திராவிட மணி, மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதேபோன்று, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் 5 பேரும் தலா ரூ.1 கோடி என 5 கோடி ரூபாய் வழங்க உள்ளார்கள். மொத்தம் 10 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஆ.ராசா இன்னும் 4-5 நாட்களுக்கு தங்கி நிவாரணப் பணிகளை முடுக்கிவிட இருக்கிறார். பிரச்சினைகள், குறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார். இந்த இரண்டு நாட்களாக நான் செய்த ஆய்வுகளைத் தொகுத்து முதல்வரிடம் மனு வழங்கப்படும். அவலாஞ்சி மின் ஊழியர்கள் வீடுகள் சேதம் குறித்தும் எடுத்துச் சொல்லப்படும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டு இருக்கிறது", என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x