Published : 11 Aug 2019 07:02 PM
Last Updated : 11 Aug 2019 07:02 PM

ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த வீரமலை படுகொலை; குடும்பத்திற்கு அரசு வேலை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை

ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த வீரமலை படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வீரமலை குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் தோகைமலை ஒன்றியம், முதலைப்பட்டி ஊராட்சியில் கடந்த 29-ம் தேதி இரட்டை கொலை சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலைப்பட்டியை சேர்ந்த வீரமலை என்பவர் அந்த ஊரில் உள்ள சுமார் ஏரி 198 ஏக்கரில் இருந்ததாகவும், தற்போது 39 ஏக்கராக குறைந்திருப்பதையும் கண்டு, குளம் ஆக்கிரமிப்பாளர் யார் என்பதை அறிந்த சமூக ஆர்வலரான வீரமலை என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சமூக ஆர்வலரான வீரமலை மற்றும் அவரின் மகன் நல்லதம்பி ஆகிய இருவரையும் நடுரோட்டில் வெட்டி கொடூரமாக கொலை செய்திருப்பது வேதனையாக உள்ளது. இதுபோன்ற கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும்.

இனிமேலும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு பாதுகாப்பும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும். சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x