Last Updated : 17 Jul, 2015 09:35 AM

 

Published : 17 Jul 2015 09:35 AM
Last Updated : 17 Jul 2015 09:35 AM

முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு மருந்துகள் வழங்குவதில் தாமதம்: ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடும் ஊழியர்கள்

முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் கால தாமதமாக வழங்கப்படுவதால், தேவையான மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து ஊழியர்கள் வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் ஜி.வி.கே. அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (இ.எம்.ஆர்.ஐ.) என்கிற தனியார் நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக தமிழக அரசு அந்த நிறுவனத்துக்கு பணத்தை வழங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் 760 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 3,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆம்புலன்ஸுக்கு ஒரு ஓட்டுநர், ஒரு மருத்துவ உதவி யாளர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக, அவர் களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதன் மூலமாக தீவிர விளைவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆம்புலன்ஸுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள், தேவையான மருந் துகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கோவையைச் சேர்ந்த 'ஈரநெஞ்சம்' அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன் கூறும்போது, "கடந்த 12-ம் தேதி, மேட்டுப் பாளையம் கவுண்டர் மில் பகுதியில் மோட்டார் பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந் தார். அவரை மீட்க வந்த 108 ஆம்புலன்ஸில் காயமடைந்தவரின் ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்வதற்கு பஞ்சுகூட இல்லை. விசாரித்தபோது முதலுதவி உப கரணங்கள் தங்களுக்கு சரியாக விநியோகிக்கப்படவில்லை" என்றனர்.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் கோவை மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், "ஆம்புலன்ஸுக்கு வழங்க வேண்டிய காட்டன் பஞ்சு, கையுறை, சர்க்கரை, ரத்த அழுத்த அளவை கணக்கிடும் உபகரணங்கள் மற்றும் தேவையான மருந்துகள் கேட்டால் உடனடியாக அனுப்பி வைப்பதில்லை. 2, 3 மாதங்கள் கழித்துதான் வருகிறது. அதனால் அவசர தேவைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தேவையான மருந்துகளை வாங்கிக் கொள்கிறோம். இந்த பிரச்சினை தமிழகம் முழுவதும் உள்ளது" என்றனர்.

இது குறித்து ஜி.வி.கே. அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (இ.எம்.ஆர்.ஐ.) நிர்வாக பிரிவு மேலாளர் பிரபுதாஸ் கூறும்போது, "ஆம்புலன்ஸ்களுக்கு தேவையான முதலுதவி மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை. நாங்கள் தேவையான அளவு கையிருப்பு வைத்து விநியோகித்து வருகிறோம். ஒவ்வொரு ஆம்புலன்ஸையும் பராமரிக்கும் ஓட்டுநர்கள், மருத்துவ உபகரணங் கள் தீருவதற்கு முன்கூட்டியே தேவையான பொருட்கள் குறித்த விவரங்களை பதிவு செய்தால் உடனடியாக அனுப்பி விடுகிறோம்.

ஓட்டுநர்கள், இந்த விவரங்களை சரியாக அனுப்பத் தவறினால் மட்டுமே குறிப்பிட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் போக வாய்ப்பு உண்டே தவிர, எங்கள் தரப்பில் பிரச்சினை கிடையாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x