Published : 10 Aug 2019 03:08 PM
Last Updated : 10 Aug 2019 03:08 PM
வேலூர் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை ஒன்றும் பெற்றுவிடவில்லை. ஏற்கெனவே பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்துள்ளது என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே ஆமத்தூரில் இன்று (சனிக்கிழமை) அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலஜி கால்நடை மருந்தகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி:
"வேலூர் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை ஒன்றும் பெற்றுவிடவில்லை. ஏற்கெனவே பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்துள்ளது. இதை மிகப்பெரிய வெற்றியாகச் சொல்லிவிடமுடியாது.
அதிமுக 40 சதவீததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. இன்னும் 2 மாதம் கழித்து தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார்.
கடந்த முறை திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், தற்பொழுது அதிமுகவுக்கு வாக்களித்ததால்தான் நாங்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம். திமுகவினர் மதப்பிரச்சினையை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்" என்றார்.
திமுகவின் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு, "சென்னையில் இருந்த சகேதாரி கனிமொழியை பிரச்சாரத்திற்கு அழைக்காமல், மகன் உதயநிதியை அனுப்பி பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். இதன் மூலம் திமுக வாரிசு அரசியல் கட்சிதான் என்பது உறுதியாகிறது" எனக் கூறினார்.
வைகோவுக்கே ஆதரவு; கட்சிக்கல்ல..
வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து குறித்த கேள்விக்கு, "வைகோ ஈழத்தமிழர்களை அழித்த கட்சி காங்கிரஸ் என்பதனால் தன் மன வேதனையைப் பேசியுள்ளார். நாங்கள் வைகோவின் கருத்துக்கு மட்டுமே ஆதரவு. அவரின் கட்சிக்கு எங்கள் ஆதரவு இல்லை.
அதிமுகவே வெற்றி பெறும்..
சீமான் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக தேர்தலில் நிற்க வேண்டும் என்று கூறுகிறார். அப்படி அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றால் எப்போதுமே அதிமுகதான் வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் அந்த முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும்
ஆனால் சீமான் சொல்வதைப் போல் பணம் கொடுத்து யாரும் வெற்றி பெற முடியாது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களிக்கின்றனர்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT