Published : 10 Aug 2019 01:21 PM
Last Updated : 10 Aug 2019 01:21 PM
முல்லைப்பெரியாறு ஆற்று நீருடன் கிளைநதி மற்றும் அருவி நீரும் இணைவதால் வைகை ஆற்றில் நீரோட்டம் அதிகமாகி உள்ளது. இருகரைகளை தொட்டபடி அழுத்தத்துடன் செல்லும் நீர் கரைகளைக் கரைத்து நீரோட்டப்பாதையின் அகலத்தை அதிகரித்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை தாமதமாக துவங்கினாலும் மழையின் அளவு அதிகமாக உள்ளதால் சில தினங்களிலேயே 14 அடிநீர் அளவிற்கு பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் 600-ல் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 1200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேவேளையில் கிளைநதிகளிலும் நீர்பெருக்கு ஏற்பட்டு ஆறு, அருவிகளிலும் நீரோட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சுருளிஅருவி, கூடலூர் சுரங்கனாறு, காமயகவுண்டன்பட்டி வரட்டாறு, தேனி கொட்டக்குடி ஆறு, மஞ்சளாறு, சண்முகாநதி, மூலவைகை, மேகமலை அருவி என்று பல பகுதிகளில் இருந்து நீர் முல்லைப் பெரியாற்றில் இணைந்து வருகிறது.
இந்த இணைவு நதிகள் பெரும்பாலும் தேனி அம்மச்சியாபுரம், குன்னூர் பகுதிகளில் நிறைவடைகிறது. இதனால் இங்குள்ள வைகை ஆற்றில் நீர்பெருக்கு அதிகமாகியுள்ளது. பல மாதமாக வறண்டு கிடந்த இந்த ஆறு தற்போது இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. மேலும் இதன் வேகமும் அதிகமாக உள்ளது.
கரையோரங்களில் உரசிச் செல்லும் அழுத்த நீரினால் மண் சரிந்து நீரோட்டப்பாதையின் அகலமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மழைக்கு ஏற்கனவே கரைப்பகுதியில் சேறாக இருந்து வரும் நிலையில் ஆற்றுநீரும் இவற்றை வலுவிழக்கச் செய்து வருகிறது. எனவே யாரும் ஆற்றோரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் மழை தொடர்வதால் பெரியாறு அணையில் இருந்து நீர்வெளியேற்றமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்றும் சாரல் மழை பரவலாக பெய்யத் துவங்கியது. எனவே நீர்வரத்தும் இதே அளவிற்கு இருக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல மாதங்களாக பாறைகளாகவும், மண்வெளியாகவும் பார்த்த ஆறுகளை நீருடன் பார்ப்பது பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT