Published : 10 Aug 2019 01:01 PM
Last Updated : 10 Aug 2019 01:01 PM

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை

வேலூர் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெறுவோம் என்றார் ஸ்டாலின், ஆனால் வெறும் 8,141 வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றுள்ளனர் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் பிறந்த மூன்று சிங்கக் குட்டிகளுக்கும் நான்கு புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டினார்.

இதில், ஆண் சிங்கக்குட்டிக்கு பிரதீப் என்றும், பெண் சிங்கக் குட்டிகளுக்கு தட்சிணா, நிரஞ்சனா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல, ஆண் புலிக்குட்டிகளுக்கு மித்ரன், ரித்விக் எனவும், பெண் புலிக்குட்டிகளுக்கு யுகா, வெண்மதி எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு, ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவிலிருந்து காண்டாமிருகம் வரவழைக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் முதல்வர் திறந்து வைத்தார். அந்த காண்டாமிருகத்துக்கு ராமு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், பெண் காண்டாமிருகத்தை பிஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அப்போது, வேலூரில் அதிமுக தோல்வி குறித்த கேள்விக்கு, "திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் பல லட்ச வாக்குகளில் வெற்றி பெற்றோம், வேலூரிலும் பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனக் கூறினார். ஆனால், 8,141 வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வென்றுள்ளது.

வேலூரில் சட்டப்பேரவை தேர்தலில், குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். இதனை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்" எனப் பதிலளித்தார்.

முத்தலாக், காஷ்மீர் விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால் சிறுபான்மை வாக்குகள் குறைந்துவிட்டதா என்ற கேள்விக்கு, "வாக்குகளை மக்கள் யாருக்குச் செலுத்துகின்றனர் என்பது ரகசியம். சிறுபான்மை மக்கள் வாக்களித்தார்களா? பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்களா என்பது எப்படி தெரியும்? யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. தமிழகம் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகின்றது. சாதி, மத அடிப்படையில் இங்கு அரசியல் செய்வது கிடையாது. அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதே நிலைமை உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரும். அதில், அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்", என கூறினார்.

நீலகிரி கனமழை சேதம் குறித்துப் பேசிய முதல்வர், "நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. பந்தலூர் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. கனமழையால் சிக்கிய 34 பேர் பேரிடர் மீட்புக்குழுவினர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 5,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15,000 பேர் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குடிநீர், சாலை, தெருவிளக்கு,போக்குவரத்து ஆகியவற்றை சரிசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x