Published : 10 Aug 2019 11:03 AM
Last Updated : 10 Aug 2019 11:03 AM

கனமழையால் பாதிப்பு: கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மீட்புப் பணிகளை முடுக்கிடுக; தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மீட்புப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் எங்கேயும் இல்லாத அளவுக்கு 91 செ.மீ. அளவுக்கு ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் மழையின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளது. மழையால் உயிரிழந்துள்ள 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயற்கையின் இந்தச் சீற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு முழு வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுக்களை உடனடியாக அமைத்து மாவட்ட வாரியாக இந்தப் பணிகளைச் செய்திட வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதில் அமமுக தொண்டர்களும் தங்களை முழு அளவில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்", என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x