Published : 09 Aug 2019 05:42 PM
Last Updated : 09 Aug 2019 05:42 PM
உதகை
கனமழை காரணமாக கூடலூர் பகுதி மூன்று மாநிலங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, தீவாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 8 நாட்களாக தொடர் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் பல பகுதியில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்துள்ளன. உதகை-மஞ்சூர் மற்றும் உதகை-கூடலூர் சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இத்தலார் அருகேயுள்ள வினோபாஜி நகரில் வீடு மீது மண் விழுந்து சென்னி (70) என்ற முதியவர் உயிரிழந்தார். இன்று உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தில் பணிக்குச் சென்று திரும்பிய விமலா, சுசீலா ஆகிய இரு பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் போராடி அவர்களின் உடல்களை மீட்டனர்.
கூடலூர் அருகே நடுவட்டம் இந்திரா நகரில் வீட்டின் மீது மண் சரிந்ததில் தாய் அமுதா மற்றும் மகள் பாவனா(10) உயிரிழந்தனர். காயமடைந்த மகன் லோகேஸ்வரன்(12) காயமடைந்து, சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சூர் அருகேயுள்ள காட்டுக்குப்பை பகுதியில் மின்வாரிய ஒப்பந்தப் பணி மேற்கொண்டு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சஜீவ் (30) மீது மண் சரிந்ததில் அவர் உயிரிழந்தார். பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூரில் மேஜர் ஹர்மன் தலைமையில் 64 ராணுவ வீரர்கள், வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.
சராசரியாக 220 மி.மீ., மழை பதிவு
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி சராசரியாக 220 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீட்டருக்கு அதிகமான மழை பதிவானது.
மழை பதிவு (மி.மீ.)
உதகை 187.7, நடுவட்டம் 221, கல்லட்டி 76, கிளன்மார்கன் 209, குந்தா 185, அவலாஞ்சி 911, அப்பர் பவானி 450 எமரால்டு 361, கெத்தை 102, கிண்ணக்கொரை 127, குன்னூர் 102, பர்லியாறு 65, கேத்தி 111, கோத்தகிரி 60, கோடநாடு 75, கூடலூர் 249, தேவாலா 257 மி.மீட்டர் மழை பதிவானது.
தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இன்று மதியம் வரை மழை பெய்து வந்தது. மதியத்துக்குப் பின்னர் மழையின் தீவிரம் குறைந்து, மிதமான மழை பெய்து வருகிறது. உதகை மற்றும் குந்தா பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதலடைந்தனர். ஆனால், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் மழை குறையவில்லை.
மண் சரிவு
கூடலூர் நிலம்பூர் சாலையில் எல்லைப் பகுதியான நாடுகானியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல சேரங்கோடு செக்போஸ்ட் பகுதியில் மண் சரிந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. உதகை- கூடலூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கேஆர்எஸ் அணை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நஞ்சங்கோடு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக கூடலூர் பகுதி மூன்று மாநிலங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, தீவாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT