Published : 08 Aug 2019 04:40 PM
Last Updated : 08 Aug 2019 04:40 PM
நீலகிரி
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் பெய்து வரும் கனமழையால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மின்நிலையத்துக்கு அருகே இரு இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா மின் உற்பத்தி வட்டத்துக்குட்பட்டு குந்தா, கெத்தை, அவலாஞ்சி, பரளி, பில்லூர் மற்றும் காட்டுகுப்பை ஆகிய பகுதிகளில் நீர் மின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
அவலாஞ்சி மலை அடிவாரத்தில்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 35 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவலாஞ்சி மற்றும் மேல்பவானி பகுதியில் கனமழை பெய்கிறது. அவலாஞ்சியில் நேற்று (புதன்கிழமை) 405 மி.மீ., மழையும், இன்று அதிகபட்சமாக 802 மி.மீ., மழையும் பதிவானது. இதனால், இப்பகுதியில் உள்ள சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அவலாஞ்சி மின் நிலையத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள மலையில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவின் போது மண் மற்றும் மரங்கள் அடித்து வரப்பட்டன. இதனை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவாலஞ்சி மின்நிலையத்திற்கோ, மின் ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் பல இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் மின் ஊழியர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். குந்தா, கிளன்மார்கன், பில்லூர் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நீர்பிடிப்பு பகுதிகளான மேல்பவானி, அவலாஞ்சி, போர்த்திமந்து, பைக்காரா, கிளன்மார்கன், பார்சன்ஸ்வேலி, முக்கூர்த்தி போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து மற்றும் முக்கூர்த்தி ஆகிய அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
கிளன்மார்கன், குந்தா மற்றும் பில்லூர் அணைகள் நிரம்பியுள்ளதால், இந்த மூன்று அணைகளின் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குந்தா மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி மற்றும் முக்கூர்த்தி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன.
குந்தா, பில்லூர் மற்றம் கிளன்மார்கன் அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குந்தாவில் விநாடிக்கு 2600 கன அடி நீரும், கிளன்மார்கன் அணையில் இருந்து 500 கனஅடி நீரும், பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 34 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, முக்கூர்த்தி ஆகிய அணைகள் ஓரிரு நாட்களில் நிரம்பும். இந்த அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றும் நிலை ஏற்படும்.
அவலாஞ்சி மின் நிலையம் அருகே இரு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மின் நிலையத்திற்கோ, ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதே போன்று ஒரு வாரம் மழை பெய்தால் மின் உற்பத்திக்கு பயன்படும் அனைத்து அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளது", என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT