Published : 06 Aug 2019 04:37 PM
Last Updated : 06 Aug 2019 04:37 PM
தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 62.
திமுக, அதிமுக என இரண்டு திராவிடக் கட்சிகளிலும் அவர் இருந்துள்ளார். திமுக சார்பில் முதன்முதலில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து கடந்த 1996-ம் ஆண்டு அவர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக ஆட்சியில் அவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டது.
1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய ஜெனிபர் சந்திரன். திமுக மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கட்சியிலிருந்து விலகினார். அதன் பின்னர் கடந்த 2004 ஆண்டில் அதிமுக.,வில் ஐக்கியமானார்.
அவருக்கு அதிமுக.,வில் மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் 2010-ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் நீக்கப்பட்டார். ஆனால், அதிமுக மாநில மீனவரணி இணைச் செயலாளராக தொடர்ந்து இருந்து வந்தார்.
சமீபகாலமாக சிறுநீரக பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவரது உயிர் பிரிந்தது.
அவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர். அவரது உடல் சொந்த ஊரில் நாளை மாலை 4 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT